தமிழில் முதல் நாவலாசிரியரான வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து இத் தொகுப்பு தொடங்குகிறது. மலேசியாவைச் சேர்ந்த சீ.முத்துசாமியின் நாவல் வரை 131 நாவலாசிரியர்கள் பொருளடக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். பெண்களின் நிலை, ஆணாதிக்கப் போக்கு, சாதியக்கொடுமைகள் ஆகியன எழுத்தாளர்களின் படைப்புக்களில் எவ்வாறு கையாளப்பட்டிருக்கின்றன என்பது இந்நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய "தாசிகள் மோகவலை அல்லது மதிபெற்ற மைனர்' தேவதாசி முறை ஒழிப்புக்கான நேரடியான பிரசார நாவல். நகுலனின் "நாய்கள்' நாவலுக்கு தமிழ் இலக்கியத்தில் தனி இடமளிப்பது தவிர்க்க இயலாதது, காரணம் அதன் வடிவமைப்பு. குறிப்பான கதையை மையமாகக் கொள்ளாமல், தத்துவ விசாரங்களையும் கூச்சலாக மாற்றாமல் நாவலை கையாண்டிருக்கும் பாங்கு சிறப்பு. டேனியலின் "பஞ்சமர்' நாவல் முழுமையும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்கான நியாயங்கள் முதன்மை பெறுகின்றன.
எம்.ஜி.சுரேஷின் "அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்' நாவல், ர.சு.நல்லபெருமாளின் "கல்லுக்குள் ஈரம்', கோ.வி.மணிசேகரனால் படைக்கப்பட்ட "தென்னங்கீற்று' , சா.கந்தசாமியின் "விசாரணைக் கமிஷன்' நாவல் என தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள நாவலாசிரியர்களின் படைப்புகளை ஒரே நூலில் அளிக்கும் ஒரு சிறு அறிமுகமாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழ் இலக்கிய உலகில் பாராட்டத்தக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் நூலாசிரியர். விடுபட்ட நாவலாசிரியர்கள் பற்றிய ஆய்வுகள் இரண்டாவது பாகத்தில் இடம்பெறும் என்று நூலாசிரியர் என்னுரையில் குறிப்பிட்டுள்ளது ஆறுதலளிக்கிறது.
Be the first to rate this book.