புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரும் தத்துவவாதியுமான ஆல்டஸ் ஹக்ஸ்லே தன் வாழ்வின் இறுதி காலத்தில் ‘மௌன வசந்தம்’ என்ற நூலைப் படிக்கிறார். ரேச்சல் கார்சன் என்கிற பெண்மணி எழுதிய அந்நூல், உலகச் சுற்றுச்சூழல் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட நூல். அதனால் அது, ‘நவீனச் சுற்றுச்சூழலின் பைபிள்’ எனப் போற்றப்படுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவினால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பை விரிவாகப் பேசிய அந்நூலைப் படித்து முடித்ததும் ஆல்டஸ் ஹக்ஸ்லே வேதனையுடன் இவ்வாறு சொன்னாராம். “ஆங்கிலக் கவிதையின் பொருள்வளத்தில் பாதியை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.” சுற்றுச்சூழல் அழிவதால் ஆங்கில மொழியின் சொல்வளமும் அழிகிறது என்கிற ஆபத்தை உணர்ந்தே ஹக்ஸ்லே அவ்வாறு கூறினார். சூழல் அழிந்தால் மொழி அழியும் எனும்போது தமிழ் மட்டும் என்ன வாழ்கிறது? நாமும் அவ்வாறு தமிழில் ஏராளமான சொற்களை இழந்து வருகிறோம். ஒரு நிலத்தில் வாழும் ஓர் உயிரினம் அழிந்தால், அங்குப் பேசப்படும் மொழியிலுள்ள அவ்வுயிரினம் தொடர்பான சொற்களும் சேர்ந்து அழியும். எடுத்துக்காட்டாக, நம் நிலத்திலிருந்து ‘யானை’ என்கிற உயிரினம் அழிந்தால், யானை தொடர்பான சொற்களைத் தமிழ் இழக்கும். அதிலும் குறிப்பாகத் ‘தும்பிக்கை’ என்கிற சொல் முற்றிலும் மறைந்துவிடும். ஏனெனில், தும்பிக்கை என்ற உறுப்பு மற்ற உயிரினங்களுக்குக் கிடையாது.
Be the first to rate this book.