புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இந்த வகையான மலர்கள் தமிழியலையும் தமிழ்ச் சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கான / மீள்வாசிப்பு செய்வதற்கான ஆவணங்களாகத் திகழ்கின்றன. கடந்த ஆண்டு ‘தமிழ்ப் பதிப்புலகம் (1800-2009) எனும் மலர் வெளிவந்தது. இம்மலர் கல்வியாளர்கள் மற்றும் தமிழ்ச் சமூக வரலாற்றில் அக்கறை கொண்டவர்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அந்த வரிசையில் இன்னொரு சமகால வரலாற்று ஆவணமாக ‘தமிழ் நூல் தொகுப்பு வரலாறு (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) என்னும் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் தமிழ்நூல் தொகுப்புப் பாரம்பரியம் குறித்து பன்முகப்பட்ட நிலையில் விவாதிக்கிறது.
தமிழ் இலக்கியங்களுள் தொன்மையானதும் தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதுமான சங்க இலக்கியங்களே ஒரு தொகுப்பு நூல்தான். ‘சங்க இலக்கியம்’ எனும் பெயர் பரவலாக அறியப்படுவதற்கு முன்னர் ‘பாட்டும் தொகையும்’ ‘பதினெண்மேற்கணக்கு நூல்கள்’ எனும் பெயர்களே வழங்கப்பட்டன. இவை தொகுக்கப்பட்டவை எனும் தன்மையை உணர்த்தும் வகையிலான பெயர்கள். தமிழில் மட்டுமல்லாமல் உலகின் பல மொழிகளிலும் _ குறிப்பாக தொன்மையான மொழிகளில் _ இவ்வாறான தொகுப்புப் பாரம்பரியம் செம்மொழி களுக்கிடையேயான பொதுமைக் கூறுகளுள் தொகுப்பு மரபும் முக்கியமானது. இம்மரபு தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் எல்லாக் கட்டங்களிலும் இருந்துள்ளது; இன்றும் தொடர்கிறது.
இலக்கியம் என்பது மொழியும் உணர்வும் மட்டுமேயல்ல. அது ஒரு குறிப்பிட்ட காலகட்ட மக்களின் உளவியல் மற்றும் வாழ்வியலின் புனைவு மயப்படுத்தப்பட்ட / பொதுமைப் படுத்தப்பட்ட பதிவுகள். இப்பதிவுகள் தமிழ்ச் சூழலில் தொகுப்பு மரபினூடாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கையளிக்கப்பட்டன. எனவேதான் பண்டைக் காலத்திலேயே ஆய்வுப் பாரம்பரியம் இருந்துள்ளது எனக் குறிப்பிடும் ஏ.வி. சுப்பிரமணியன் அவர்கள் அதனைத் தொகுப்பு மரபுகளிலிருந்தே அடையாளம் காண்கிறார். தொகுப்பு மரபு, ஒரு காலகட்டத்தின் பதிவுகளை அடுத்தடுத்த தலை முறைகளுக்கு கடத்துகிறது என்பது எந்த அளவிற்கு உண்மையானதோ, அதே அளவிற்கு அந்தக் காலகட்டத்தின் அனைத்துப் பதிவுகளையும் கடத்துவதில்லை என்பதும் உண்மை. தொகுப்பில் ‘தெரிவுÕ நிகழும்போதே அதன் உடன்விளைவாக விலக்கலும் நிகழ்கிறது. இதற்கு இலக்கிய நயமும் உணர்வும் மட்டும் காரணமில்லை. தொகுப்போரும் தொகுப்பிப்போரும் எவ்விதமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனரோ அதற்கு மாற்றான பதிவுகள் விலக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இத்தகையப் புரிதல்களோடே தொகுப்பு மரபு குறித்தான விவாதங்களை முன்வைக்கும் கட்டுரைகள் அடங்கிய நூலொன்றை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினோம்.
சங்ககாலம் தொடங்கி சமகாலம் வரையிலான தொகுப்பு மரபுகள் குறித்த முழுமையான தரவுகளையும் விவாதங்களையும் உள்ளடக்கிய நூலாக வெளிவரவேண்டும் எனத் திட்டமிட்டோம். மரபிலக்கியத் தொகுப்புகள், இருபதாம் நூற்றாண்டுத் தொகுப்புகள், இயக்கம் சார்ந்த தொகுப்புகள், நாட்டார் வழக்காற்றியல் தொகுப்புகள் ஆகிய வகைப்பாடுகளின் கீழ் நாற்பது தலைப்புகளைத் தேர்வு செய்தோம். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இலக்கணத் தொகுப்புகள், இசைநூல் தொகுப்புகள், ஈழத் தொகுப்புகள், மானுடவியல் தொகுப்புகள், விளிம்புநிலைத் தொகுப்புகள், புதுமைப்பித்தன் மற்றும் கு.ப.ரா. தொகுப்புகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் கட்டுரைகளைப் பெறமுடியவில்லை. இந்நூல் தொகுப்பு மரபு குறித்த ‘முழுமையான’ நூல் அல்ல என்று உணர்கிறோம். அதேசமயம் சங்ககாலம் தொடங்கி சமகாலம் வரையிலான தொகுப்பு மரபை ஆவணப்படுத்துவதில் முன்கை எடுத்திருக்கிறோம். இம்முயற்சியின் நிறை குறைகள் குறித்து கல்வியாளர்களும் அறிஞர்களும் வாசகர்களும் விவாதித்து எங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்வார்கள் என்று நம்புகிறோம். தமிழ் இலக்கியத் தொகுப்பு மரபு குறித்து தொடர்ச்சியான விவாதங்களையும் முழுமையான ஆவணத்தையும் உருவாக்கும் முயற்சியில் இந்நூல் ஓர் ஆரம்பப்புள்ளி.
Be the first to rate this book.