வாய்மொழி வழக்காறுகள், நாட்டார் இலக்கியம், கைவினைக் கலைகள், நிகழ்கலைகள், கிராமத்துக் கடவுள்கள், பழமரபுகள், வழிபாட்டு முறைகள் என்று நாட்டுப்புறவியலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவை அனைத்தும் இதில் உள்ளன. ஆனால், எந்தவொரு இடத்திலும் ‘நான் உங்களுக்கு ஒரு கலைச்சொல்லை விளக்கப்போகிறேன்’, ‘ஒரு முக்கியமான கருத்துருவாக்கத்தை நீங்கள் தெரிந்துகொண்டாகவேண்டும்’ என்கிற தொனியோடு தருமராஜ் நம்மை அணுகுவதில்லை.
‘நான் ஒருமுறை பாவைக்கூத்தொன்றைக் கண்டபோது என்ன நடந்தது தெரியுமா?’, ‘எனக்குத் தெரிந்த ஒரு கதையைச் சொல்லட்டுமா?’, ‘நான் அனுமானிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவா?’ என்று போகிறபோக்கில் உரையாடலைத் தொடங்கி வைக்கிறார். அந்த உரையாடலில் அவர் பார்த்த காட்சிகளை நாம் காண்கிறோம், அவர் படித்ததை நாம் படிக்கிறோம், அவர் வந்தடையும் முடிவுகளை நாம் அசைபோடுகிறோம். எல்லாமே மிக இயல்பாக நிகழ்கின்றன.
‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’, ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் டி. தருமராஜின் முக்கியமான படைப்பு இது.
Be the first to rate this book.