மிழ் ஒரு தொன்மையான மொழி என்பதோடு தமிழ் உலக மொழியியல் அறிஞர்கள் பலராலும் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு செவ்வியல் மொழி என்பதை இந்நூல் உறுதிசெய்கிறது. சங்ககாலத்தில் பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருந்தது என்பதை கீழடி அகழாய்வும், சங்க இலக்கியங்களும் உறுதி செய்கின்றன. அன்று இந்த பரவலான கல்வியறிவையும் எழுத்தறிவையும் வழங்குவதற்கான கல்விமுறை எப்படி இருந்தது என்பது குறித்து இந்நூல் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. சங்ககால நூல்களின் அழிவு குறித்தும் அவை படைக்கப்பட்ட காலம் குறித்தும் தொன்றுதொட்டு இருந்துவந்த தமிழ் அறிவைப் பாதுகாத்து வந்த ஆகமங்கள் குறித்தும் இந்நூலில் பேசப்பட்டுள்ளது. கி.மு. 750 முதல் கி.பி. 1800 வரையான தமிழ் நூல்களின் வரலாறும் சுருக்கமாகச்சொல்லப்பட்டுள்ளது.
தமிழின் சிறப்பை அறிந்துகொள்ள சமற்கிருத மொழியோடு தமிழ் ஒப்பிடப்பட்டு தமிழ் மொழிக்கு இணையான சிறப்பு சமற்கிருத மொழிக்கு இல்லை என்பது இந்நூலில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் கி.மு. 187 க்குப்பின் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களின் விளைவாகத்தான் பாணினியின் இலக்கணம் தோன்றியது என்பதும் இங்கு கூறப்பட்டுள்ளது. தமிழ்ச்சமூகம், பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு வளர்ச்சியடைந்த நகரச் சமூகம் என்பதை தமிழ் அறிவு மரபின் தந்தையாகக் கருதப்படும் தொல்கபிலரின் எண்ணிய மெய்யியல் குறித்தான விளக்கங்கள் மூலம் இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாய்மொழிக்கல்வியின் தேவை, தாய்மொழிக்கல்வி குறித்த சர்வதேசக் கருத்துகள், தமிழ்மொழிக்கல்வியின் சிறப்பு ஆகியன குறித்து இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆங்கிலம் ஓர் இன ஆதிக்க, ஆணாதிக்க மூடநம்பிக்கை மொழியாக இருப்பது குறித்தும், ஆங்கில நாட்டிலேயே இலத்தின் பிரேஞ்சு மொழிகளின் ஆதிக்கத்தால் ஆங்கிலமொழி பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கிவைக்கப்பட்டிருந்த நிலைமை குறித்தும், கி.பி. 1750 வரை அறிவியலைப் பேசுவதற்கு தகுதியற்ற மொழி ஆங்கிலம் என ஆங்கிலமக்களே கருதிவந்தார்கள் என்பது குறித்தும் இந்நூல் பேசுகிறது. தமிழ்நாட்டில் நிலவும் ஆங்கிலமொழி மோகம் குறித்தும் இந்நூலில் பேசப்பட்டுள்ளது. தமிழ் மொழியே நமது அடையாளம் என்பது குறித்தும் செர்மன், இத்தாலி, பிரேஞ்சு, சீனா, கொரியா, சப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொழிகளே அவைகளின் அடையாளமாக இருப்பதோடு, அந்தந்த மொழிகளே அந்தந்த நாடுகளின் ஆட்சி மொழி முதல் இறைமொழி வரை அனைத்துமாக இருப்பது குறித்தும் இந்நூல் எடுத்துரைக்கிறது.
தமிழ் ஆட்சிமொழிச்சட்டம் குறித்தும் தமிழகத்தில் தமிழின் இன்றைய நிலை குறித்தும் இந்நூல் பேசுகிறது. மேலும் பண்டைய உலக மொழிகள், அவற்றின் எழுத்துக்கள், இனம்-மொழி ஆகியவற்றிற்கு இடையே உள்ள உறவுகள் ஆகியன குறித்தும் இந்நூல் பேசுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழ்மொழியின் பண்டைய சிறப்புகள், தமிழ்நாட்டில் அதன் இன்றைய நிலை, அதன் இன்றைய தேவை ஆகியன குறித்த ஒரு முழுமையான கண்ணோட்டத்தை இந்நூல் வழங்குகிறது எனலாம்.
Be the first to rate this book.