"தினத்தந்தி"யில் "வரலாற்றுச் சுவடுகள்" என்ற மெகாத் தொடர் வெளியானபோது, அதில் தமிழ் சினிமா வரலாறு இடம் பெற்றது. சாதனை படைத்த படங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் மட்டும் அல்லாது, புகழ் பெற்ற கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் அபூர்வமான புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டன. இதனால் பெரிதும் கவரப்பட்ட வாசகர்கள், "சினிமா வரலாற்றை புத்தகமாக வெளியிடவேண்டும்" என்று வற்புறுத்தி வந்தனர். இதனால், தமிழ் சினிமா வரலாற்றை 2 பகுதிகளாக வெளியிட முடிவு செய்த "தினத்தந்தி பதிப்பகம்", இப்போது முதல் பாகத்தை வெளியிட்டுள்ளது. 528 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் 500க்கும் மேற்பட்ட வண்ணப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ்த் திரை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரும், நகைச்சுவை மன்னராகத் திகழ்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், புகழின் சிகரத்தில் இருந்தபோது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை அடைந்தது... கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் காதல்... 28 வயதில் கிட்டப்பா இறந்ததால் சுந்தராம்பாள் மேற்கொண்ட துறவுக்கோலம்... ரூ.2 லட்சம் செலவில் ஏவி.எம். தயாரித்த "ஸ்ரீவள்ளி", 20 லட்சம் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. "சந்திரலேகா"வைத்து தயாரிக்கும்போது எஸ்.எஸ்.வாசன் அனுபவித்த சோதனைகள்... சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், "ராஜகுமாரி" மூலம் கதாநாயகன் ஆனது... "பராசக்தி"யில் நடித்து வந்த சிவாஜிகணேசனை நீக்கி விட்டு, கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்க நடந்த முயற்சிகள்... உத்தமபுத்திரனை தயாரிக்க எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் நடந்த போட்டி... இப்படி திகைக்க வைக்கும் தகவல் நிறைந்துள்ளன. புத்தகத்தைப் பார்ப்பவர்கள், "இதன் விலை 700 ரூபாயாவது இருக்கும் என்று மதிப்பிடுவார்கள். ஆனால் இதன் விலை ரூ.360 தான்! வாசகர்களுக்கு தினத்தந்தியின் பரிசு! பட அதிபர் ஏவி.எம்.சரவணன் தமது அணிந்துரையில், "இது புத்தகமல்ல; ஒரு புதையல்! கலை உலகத்துக்கு தினத்தந்தி செய்துள்ள பெரிய சேவை" என்று குறிப்பிட்டு இருப்பது மிகச் சரியான மதிப்பீடு.
Be the first to rate this book.