புத்தபிரான் தமது பூரண ஞான ஒளியைப் பெற்ற வரலாறு மற்றும் அதன் ஆதாரங்கள் தொன்மை இந்திய வரலாற்றின் ஒரு இன்றியமையாத மையப்புள்ளியாகும். பௌத்த பிக்குகள் தென்னிந்தியா மட்டுமல்லாமல் பெரும்பான்மையான கிழக்காசிய நாடுகளிலும் உள்ள பௌத்த தளவாடங்களை, சுமார் 1,300 ஆண்டுகள் பிரகாசமான நட்சத்திர மண்டலமாக உருவாக்கி வைத்திருந்தனர்.
புத்தர் நிர்வாணம் அடைந்த பிறகு, அவரைப் பின்பற்றியொழுகிய பிக்குகள் பற்பல நாடுகளிலும் சென்று நகரம், கிராமம் முதலிய அனைத்து இடங்களிலும் தமது மதக் கொள்கைகளைப் போதிப்பதையே தமது வாழ்நாட்களின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டின் அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களிடம் பொருளுதவி பெற்று விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினார்கள். மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளர்களுக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்து வந்தார்கள். தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியும் கற்பித்து வந்தார்கள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டு மக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச் செய்து, திரிபிடகம், புத்த ஜாதகக் கதைகள்' புத்த சரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர். மற்றும் குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை நிறுவினார்கள்.
கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த கனிஷ்கரின் அவைக்களப் புலவராக இருந்தவர் அஸ்வகோஷர். இவர் மகாயான பௌத்த நெறியைப் பின்பற்றியவர். புத்தரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர் இயற்றிய காப்பியம் - புத்த சரிதம் ஆகும். சமசுகிருத செவ்விலக்கியத்தின் சிகரமாகக் கருதப்படும் காளிதாசனுக்கு முன்பே சமஸ்கிருதத்தில் ஒப்பற்ற காப்பியங்களைப் பாடியவர் அசுவகோசர். புத்தரின் தம்பியான நந்தன் என்பவரது வாழ்க்கையை மையமாகக்கொண்டு அவர் இயற்றிய காப்பியம் ‘ சௌந்தரானந்தம்‘. இந்த இரு காப்பியங்களும் காளிதாசனது காப்பியங்கள் உருவாக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவானவை. (சோ.ந.கந்தசாமி பக்கம் 150 - 151 )
புத்தரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர் இயற்றிய காப்பியம் - புத்த சரிதம் ஆகும். ஆரம்ப காலத்தில் புத்த மதத்தினர் புத்தபிரானின் எந்தவித உருவ வழிபாடும் கொண்டிருக்கவில்லை. ஒரு மேடையை அமைத்து அதன் மீது இரண்டு பாதங்களைச் செதுக்கியோ அல்லது வரைந்தோ அதையே புத்தபிரானின் திருப்பாதங்களாகக் கருதி வழிபட்டனர். இதையே பாத பீடிகை அல்லது தரும பீடிகை வழிபாடு என்று அழைத்தனர்.
Be the first to rate this book.