சோவியத் யூனியனால் ஆப்கனிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட தருணத்தில், அழுத்தம் தாங்காமல் போர்க்கொடி உயர்த்திய ஆப்கன் இயக்கங்கள் பல. காலப்போக்கில் அவை வெவ்வேறு மூலைகளில் தெறித்து விழுந்து காணாமல் போய்விட்டன. உயிரோட்டத்துடனும் உத்வேகத்துடனும் இன்று வரை இயக்கிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம், தாலிபன்.
தொடக்க காலத்தில் ஒரு போராளி இயக்கமாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது தாலிபன். அந்நியர்களை அகற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்பதுதான் அவர்களுடைய கனவு. தக்க பருவத்தில் விதைக்கப்பட்டு ஒழுங்காக எருவிட்டு,நீரூற்றி வளர்க்கப்பட்ட கனவு.
கனவை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும்? பணம். ஆயுதம். ஆதரவு. கவலை வேண்டாம் எல்லாம் தருகிறோம் வேலையை ஆரம்பியுங்கள் என்று கொம்பு சீவியது பாகிஸ்தான். கொம்பில் எண்ணெய் தடவிவிட்டது அமெரிக்கா.
ஆப்கனிஸ்தானை மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகையும் அதிர வைக்கும் தடாலடி ஆட்டங்களை ஆரம்பித்து வைத்தது தாலிபன். தாலிபனின் பதைபதைக்க வைக்கும் நடவடிக்கைகளை ஆப்கனிஸ்தான் வரலாறோடு குழைத்து,மிரட்டல் மொழியில் விவரித்துச் சொல்கிறார் பா. ராகவன்.
Be the first to rate this book.