இந்திய விடுதலைப் போராட்டத்தில் உறவு, உணவு, கனவு, ஏன் தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த சுதந்திரத் தியாகிகள் - சுதந்திரச் சுடர்களாக மின்னிக் கொண்டிருக்கிறார்கள் இந்நூலில். இந்திய சுதந்திர வரலாறு ஒரு பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தைத் தோண்டித் தோண்டி விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாற்றைத் தொடக்க காலத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை ஆசிரியர் தன் உணர்வுப்பூர்வமான சொற்பொழிவுகளால் அள்ளி வீசியிருக்கிறார்.
ஆகஸ்ட் புரட்சி, ஜாலியன் வாலாபாக் படுகொலை, வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட போராட்டங்கள் குறித்து கல்வி மூலம் நாம் பாடமாகக் கற்றிருந்தாலும், அந்த நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவதோடு, நம்மையும் அந்தக் களத்திற்கே நேரடியாகக் கொண்டு செல்கிறது ஆசிரியரின் தமிழியல் நடை. காந்தி, நேரு, நேதாஜி, பாரதி, ராஜாஜி, பெரியார், வ.உ.சி, ம.பொ.சி., கட்டபொம்மன், உத்தம் சிங், பகத் சிங், ஆஸாத், சுந்தராம்பாள், கே.பி.ஜானகியம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, ஜி.சுப்பிரமணிய ஐயர் என சுதந்திரச் சுடர்களின் பட்டியல் நீளுகிறது, எண்ணிக்கையில் அடங்காத வானத்து நட்சத்திரங்களைப் போல... இந்திய நாட்டின் மீது அவர்களுக்கு இருந்த தீராதபற்று, சமுதாயத்தின் மீது அவர்களுக்கு இருந்த அக்கறை, நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் மனவலிமை போன்றவை இன்றைய தலைமுறையை ஊக்குவித்து நிச்சயம் மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
எப்பேர்ப்பட்டவனும் சந்திக்க அஞ்சும் ஹிட்லரை நேரடியாக நேதாஜி சந்தித்த சம்பவம்; நிறைமாதக் கர்ப்பிணியாக ‘வந்தே மாதரம்!' என்று சொல்லிக்கொண்டு, சிறைக்குள் சென்ற கடலூர் அஞ்சலை அம்மாள்... இவை போன்ற நாம் அறியாத பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சுமந்து நிற்கும் இந்த நூல், உங்களை சுதந்திரப் போராட்ட காலத்திற்கே அழைத்துச் செல்லும்!
Be the first to rate this book.