சமையல் என்றதும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அதிலும் பலவித நுணுக்கங்களும், ஃபார்முலாக்களும் உள்ளன. அதன்படி செய்தால்தான் சுவையான உணவை நாம் சமைக்க முடியும். உலகின் எந்த இடத்துக்கு போனாலும் சமைப்பதற்கும் சமையல் வல்லுநர்களுக்கும் உள்ள வரவேற்பே தனி. மனிதனை ஈர்க்கக்கூடிய விஷயங்களில் நாவுக்கு சுவைகூட்டும் சமையல் மனதுக்கும் மகிழ்ச்சியூட்டும் தன்மை கொண்டது. இது நம்மில் பலர் அனுபவபூர்வமாக உணர்ந்த ஒன்றாகவே இருக்க முடியும். சமையலில் அசைவம் சைவம் மட்டுமே முதன்மைப் பிரிவுகளாக நம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. பெரிய பெரிய ஓட்டல்களுக்குப் போனால் உணவு வகைகள் நம்மை பிரமிக்கச் செய்துவிடும். அத்தனை வகைகள் அங்கே நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அத்தனை வகைகளையும் நாம் வீட்டில் சமைக்க முடியாவிட்டாலும் ஒரு சில வகைகளை நாமே வீட்டில் தயார் செய்ய முடியும். நம் குடும்ப உறுப்பினர்களை மகிழ்விக்க சில நேரங்களில் சுவையான உணவு வகைகள்கூட பேருதவியாக அமைவதுண்டு. நாமும் மகிழ்ந்து நம்மைச் சேர்ந்தவர்களையும் சுலபமாக மகிழ்விக்க சுலபமான வழி சுவையான சமையல் என்றுகூடச் சொல்லலாம். ஒருபுறம் ஆண்கள் புகழ்பெற்ற செஃப்களாக வலம் வர, மறுபுறம் ‘சமையலே தெரியாதே’ என்று கூறும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவரை எப்படி இருந்தாலும் இனி உங்களுக்குக் கவலை இல்லை. வித விதமான வகைவகையான சமையல் முறைகளைத் தாங்கி ‘அவள் விகடன்’ இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த அருமையான சமையல் குறிப்புகள் உங்களுக்கு உதவவுள்ளன. அப்படி வந்த இணைப்பு நூலில் இருந்து அறுசுவை விருந்து படைக்கும் அற்புத முயற்சியாக, அழகான தொகுப்பாக சில குறிப்பிட்ட சமையல் வகைகளைத் தேர்ந்தெடுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இணைப்பு நூலாக வந்தபோது, ‘நங்கநல்லூர் பட்ஜெட் பத்மா’ என்ற பட்டப் பெயருடன் எழுதிவந்தவரின் சமையல் குறிப்புகளின் தொகுப்பே இந்த நூல். கிராமியச் சமையல், அவசரச் சமையல், கல்யாணச் சமையல், சிக்கனச் சமையல் என வகைப்படுத்தப்பட்ட அசத்தலான இந்த சமையல் நூல் இல்லத்தரசிகளுக்கு இனிய வரப்பிரசாதம்.
Be the first to rate this book.