பாடச் சுமையால் சோர்ந்து போன குழந்தைகளுக்கு மாற்று டியூசன் அல்ல.
கதையும் விளையாட்டுமே மாற்றுகள். இக்கதைகள் பிள்ளைகளிடம் சொல்வதற்கானவை; வாசிப்பதற்கானவை அல்ல.
சுண்டெலி எளிய உயிரின் அடையாளம். சாதாரண மனிதனின் உருவகம். சிறிய மனிதர்கள் பெரிய முயற்சிகளில் ஈடுபடும்போது ‘எலிக்கு எதுக்கு இன்ஸ்பெக்டர் வேலை’ என்று கிண்டல் செய்கிறது தமிழ்ச் சொலவடை.
வெற்றி பெறுவதற்காகச் சில நேரங்களில் எலிகள் ஏமாற்றுவது போலத் தெரியும். அச்சுறுத்தல், கண்காணித்தல், கட்டாயப்படுத்தல், திணித்தல், அதிகாரம் செலுத்தல், பலத்தைக் காட்டுதல் போன்றவை இருக்கும் வரை ஏமாற்றுதலும் இருக்கும். இருக்க வேண்டும்.
தலை ஆட்டுவதை வைத்துக் குழந்தைகளை உங்கள் வழிக்குக் கொண்டு வந்து விட்டதாகக் கற்பனை செய்துவிடக் கூடாது. தலை ஆட்டுவதும் ஏமாற்றுவதற்கான அடையாளமே.
ஆனால் – ஏமாற்றுதல் என்பது சரியான வார்த்தை அல்ல. தப்பித்தல் என்று சொல்வதுதான் சரி.
யாரும் தப்பிக்க விரும்புவார்களா? அல்லது அகப்பட்டுக் கொள்ள விரும்புவார்களா?
குழந்தைகள் ஆச்சர்யத்தோடும் விருப்பத்தோடும் இணைந்து விடக் கூடிய விலங்குகள் உலகத்துக்கு இக்கதைகள் கூட்டிச் செல்கின்றன.
வீட்டையும், வீதியையும், ஊரையும் நாம் அவ்வப்போது மற்ந்து விடவும் இத்தகைய கதைகள் அவசியம்.
நம்முடைய அறிவுலகத்தில் முதலை ஒரு வஞ்சகமான – முரட்டுத்தனமான ஆபத்தை விளைவிக்கக் கூடிய விலங்கு.
பஞ்சதந்திரக் கதை போன்ற அறிவாளிக் கதைக் களத்திலும் இந்த அடையாளம் தொடர்கிறது. மனைவிக்காக குரங்கிடம் ஈரல் கேட்ட வஞ்சக முதலையின் கதை நாம் அறிந்ததுதான். கடவுள் யானையின் காலைக் கவ்வி அதனால் அடிபட்டுச் செத்த புராண முதலையையும் நாம் அறிவோம்.
ஆனால் ஆதிவாசி மக்களின் கற்பனைக் கதைக் களத்தில் முதலையின் இந்த அடையாளங்கள் மாறிப் போகின்றன.
முதலை அப்பாவியாய் – அசடாய் – பொறுப்புள்ள குடும்பத் தலைவனாய் உலா வருவதைக் காண்கிறோம்.
கதை உலகில் இது எத்தனை புரட்சி! மன உலகில் இது எப்படிப்பட்ட அற்புதம்!
மனிதர்களையும், பிற உயிர்களையும் நல்லது கெட்டது என்று பாகுபடுத்தியே குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோம். நல்லது கெட்டது என்று பிரித்துப் பிரித்து வைத்து விட்டால் எதைப் புரிந்து கொள்வது? யாரைப் புரிந்து கொள்வது?
Be the first to rate this book.