நம் சமகால உலகின் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள் புனைவாக்கி நமக்குத் தருகின்றன. மொழிகளைக் கடந்து நம்மை வந்தடையும் இக்கதைகளை ஒருசேர வாசிக்கையில் உண்டாகும் அனுபவம் அலாதியானது. கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ‘சுல்தானின் பீரங்கி’ அவரது இரண்டாவது உலகச் சிறுகதைகள் தொகுப்பாகும். மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பின் கதைகள் யுத்தம், புலம்பெயர்வு, விளிம்புநிலை வாழ்வு, இருத்தலின் குரூர அபத்தம் போன்றவற்றை மையப்படுத்தியவை. மிகச் சவாலான இலக்கிய வடிவமான சிறுகதை, வரையறுக்கப்பட்ட வெளிக்குள் சிறுகதை ஆசிரியன் நிகழ்த்தும் ஒரு புனைவுச் சாகசம் என்ற எண்ணம் இக்கதைகளின் தொனி, வடிவம், கூறுமுறை இவற்றை வாசித்தறிகையில் உறுதிப்படுகிறது. சமரசமற்றதொரு கறார்த்தன்மையுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இக்கதைகள் மூலப்பிரதிக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் அதேவேளை சரளமான வாசிப்புக்கு ஊறு தராதவை. சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு வளமூட்டக்கூடிய தொகுப்பு இது.
- அசதா
Be the first to rate this book.