உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர், அறிஞர் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது. ஆனால் சூஃபி வழி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்படியொன்று இருக்கலாம், இல்லவே இல்லை, அது முரண்பாடானது, அது இஸ்லாத்துக்கு விரோதமானது என்றெல்லாம் அறிஞர் பலரும், அவர்களை நம்புபவர்களும் சொல்லத் தயங்குவதில்லை.
அதிருக்கட்டும், முத்தத்துக்கும் சூஃபித்துவத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இரண்டும் ஒன்றுதான். சூஃபியாக இருப்பதும் ஒரு காதலனாக இருப்பது போலத்தான். முத்தம், சூஃபித்துவம் இரண்டுமே காதலின் விளைவுதான்! ஒன்று அறைக்காதல். இன்னொன்று இறைக்காதல். இரண்டுமே மெய்க்காதல்தான்! முத்தம் ஒரு சுகானுபவம் என்றால், சூஃபித்துவம் ஒரு மகானுபவம்! சூஃபி கதைகள் படித்திருப்பீர்கள். சூஃபி கவிதைகளில் மனம் பறிகொடுத்திருப்பீர்கள். சூஃபி தத்துவம் என்ற ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதல் முறையாக சூஃபித்துவத்தைப் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ள ஒரு பெரிய வாசலைத் திறந்து வைக்கிறது இந்தப் புத்தகம்!
ஆசிரியர் நாகூர் ரூமியின் "இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்" ஏற்கெனவே தமிழ் வாசகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற நூல்.
Be the first to rate this book.