இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இன்றல்ல நேற்றல்ல... மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே நெருங்கிய தொடர்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. வாணிபம் செய்ய வந்த பிரிட்டிஷாரிடமும், பிரெஞ்சுக்காரரிடமும் இந்தியாவை யார், எவ்வளவு சுரண்டுவது என்ற கொள்ளையடிக்கும் போட்டி 17&ம் நூற்றாண்டில் இருந்தே நடந்து வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அவற்றை விநியோகத்ததில் பெரும் ஊழல் நடந்தது. இதுபோன்ற சுரண்டல்களைத் தடுக்க, இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947&ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனிய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் முழங்கினர். ஆனால், நடந்தது என்ன? இன்னமும் நாட்டின் பெரும் பிரச்னையாக ஊழல் உள்ளது. அது இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கிறது. தேசத்தந்தை மகாத்மாவின் பெயரால் ஊழல் ஓங்கி ஒலித்தது. ஆம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் ஆகியவை ஊழலுக்குத் துணை போயின. மக்களுக்கான திட்டங்களில் சுரண்டல்கள் தொடங்கின. விடுதலை அடைந்தது முதல் மன்மோகன்சிங் காலம் வரை இந்தியாவில் ஊழல் எந்த அளவுக்கு புரையோடிப் போய் இருக்கிறது என்பதை துல்லியமாக அலசி துவைத்தெடுக்கிறது இந்த நூல். இந்திய துணைக்கண்டத்தில் சுரண்டல் எதுவரை பாய்ந்திருக்கிறது? அதன் வீச்சு தேசத்தை எங்கே அழைத்துச் செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக, எடுத்துக்காட்டுக்களுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். நம் தேசத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு ஊழலுக்கும் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன? ஊழலின் ஊற்றுக்கண் யார்? சுரண்டல்காரர்கள் நம் தேசத்தை சுரண்டியது எப்படி? எளிமையான நடையில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் நூலாசிரியர். சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாற்றைப் படியுங்கள். தேசம் களவு போவதை கண்டுபிடித்துக் கொள்வீர்கள்.
Be the first to rate this book.