புரட்டினால் புழுதி வாசம்! ‘‘நிழல் உலகப் பதிவை சுப்ரமணியபுரமாக சசிகுமார் கண்முன்னே நிறுத்தி இருக்கும் விதம் இந்திய சினிமா உலகை மட்டும் அல்ல... உலகளாவிய சினிமா பிரம்மாக்களையே மிரள வைக்கும். இந்தப் படத்தை இந்தியில் செய்யும் பாக்கியம் எனக்கு வாய்த்தால் பெருமையாக இருக்கும்!’’ இந்தி சினிமாவின் அசாத்திய அடையாளமான அனுராக் காஷ்யப் வியப்பும் திகைப்புமாகச் சொன்ன வார்த்தைகள் இவை.‘
சுப்ரமணியபுரம்’ திரைக்கதையை வெளியிட அனுமதி கேட்டு இயக்குநர் சசிகுமாரை அணுகியபோது, சற்று தயங்கினார். ‘படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் புத்தகம்?’ என்பது அவருடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் சினிமாவின் மேன்மை மிகுந்த அடையாளம் அல்லவா சுப்ரமணியபுரம்! ஓர் இயக்குநராக, ஒரு நடிகராக, ஒரு தயாரிப்பாளராக முதல் முயற்சியிலேயே காலத்துக்கும் பெயர் சொல்லக்கூடிய உலகளாவிய பதிவை நிகழ்த்தி இருக்கிறார் சசிகுமார்.
1980களின் காலகட்டத்தில் மதுரையின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக சசிகுமார் பதிவு செய்திருக்கும் விதம், சினிமாவை வாழ்வியல் வடிவமாக எடுக்கத் துடிக்கும் அத்தனை பேருக்குமான பயிற்சி. ‘80களின் கதை என்றபோது எல்லோரும் சிரித்தார்கள்’ எனத் தனக்கான முதல் அடி விழுந்த நிகழ்வு தொடங்கி படத்தை வெற்றிகரமாக முடித்தது வரை சகத்தோழனாக சசிகுமார் சொல்லச்சொல்ல அத்தனை பிரமிப்பு.
இயக்குநர் பாலாவின் அணிந்துரை புத்தகத்தின் மயிலிறகு பக்கம். இயக்குநர் அமீரின் ‘சுப்ரமணியபுரம்’ படம் குறித்த பார்வையும், சசிகுமார் மீதான அளவீடும் வழக்கம்போல் புயல். திரைக்கதையாக மட்டுமே அல்லாது படம் குறித்த விரிவான பார்வையைப் பதிவு செய்ய ‘சசிகுமார், மிஷ்கின், கதிர் சந்திப்பு’ இந்தப் புத்தகத்தின் ரத்தினப் பக்கங்களாகப் பதிவாகி இருக்கின்றன. ‘சுப்ரமணியபுரம்’ எப்போது புரட்டினாலும் புழுதி வாசம் வீசும் காலக்கல்வெட்டு!
Be the first to rate this book.