சுப்ரமண்ய ராஜு வாழ்ந்த காலம் (6.6.1948 - 10.12.1987), எழுதியவை இரண்டுமே கொஞ்சம்தான். ஆனால் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்தாளர் அவர்.
அவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முதல் இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் தலைமுறைவரை அவரைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் செய்கிறார்கள்.
'காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜூவின் கதை ஒன்று' என்று சுஜாதா சொன்னதை எண்ணிப் பார்க்கலாம்.
'இன்று நிஜம்' என்கிற ஒரு தொகுப்புதான் ராஜு வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது புத்தகம். புத்தகமாகவே ஆகாமல் வேறு எத்தனையோ பல கதைகள் பத்திரிகைத் தாள்களுக்குள் பல வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன.
அவருடைய கதைகளின் இந்த முழுத்தொகுப்பு, ராஜுவுக்குச் செலுத்தும் அஞ்சலி மட்டுமல்ல. எதிர்வரும் தலைமுறைக்கு ஒரு தலைசிறந்த எழுத்தாளரை மறு அறிமுகப்படுத்தும் ஓர் எளிய முயற்சியும் கூட.
பாண்டிச்சேரியில் பிறந்தவரான சுப்ரமண்ய ராஜு (இயற்பெயர் விஸ்வநாதன்), சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றியவர். மனைவியும் இரு பெண் குழந்தைகளும் அவருக்கு உண்டு. சென்னை நந்தனம் சிக்னல் அருகே நடந்த ஒரு மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தபோது அவருக்கு வயது 39 மட்டுமே.
Be the first to rate this book.