குறுந்தொகைப் பாட்டிலிருந்து 'காதலைக் காதலித்த' ஒரு கவி தேவார, திருவாசக, நாலாயிர திவ்யப் பிரபந்த நதிகளில் மூழ்கி எழுந்து ஸ்ரீவள்ளி என்ற பெயரில் இன்று நம்முன் நிற்கிறார். அலமரல், திதலை, நீரோரன்ன, தீயோரன்ன, ஆரல், சிற்றில் இழைத்தல், ஊன்நிறம், மௌவல் முகைகள், அசைவளி எனத் தமிழ் - மொழியின் சாரத்தைக் கொள்ளையடித்த கவித்துவத்தில் ததும்புகின்றன இவருடைய கவிதைகள். உயிரின் பாதையில் சுழலும் புதிர் வட்டத்தில் மிகுபுனைவின் மன விளையாட்டுகள் மடிந்து மடிந்து இங்கே கவிதைகளாகப் பொங்கிப் பெருகுகின்றன. ஸ்ரீவள்ளி கவிதைகளின் தொடர்ப் பாய்ச்சல் அவர் எங்கிருந்து வெடித்து எழுந்தாரோ அந்தக் கருவறைக்கே அவரை அழைத்துச் செல்கிறது. ஆன்மிகம் என்பது அவரது உடலோடும் உயிரோடும் கலந்த அகநெருப்பு. அதில் மலர்களைக் கொட்டி ஆராதனை நடத்துகிறது கவிதை. தீயும் பிரார்த்தனையும் ஒன்றான காதலின் உடலில் ஆன்மிக நரம்புகள் இழையோடுவதைக் கவிகளே அறிவார்கள். இக்கவிதைகள் முழுமையான பேரனுபவமாக மாறுவது அவ்வுடலை நிகழ்த்துகையில் மிகப் புதிய முறையில் கையாளப்படும் சொற்களால்தான். பெரும் உயிர்ப்புடன் துள்ளிவரும் ஸ்ரீவள்ளியின் கவிதைகள் தமிழ்க் கவிதை வரலாற்றில் மறுக்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டன.
- சமயவேல்
Be the first to rate this book.