மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் எழுத்தில் வந்த மிக முக்கியமான, சுவாரசியமான சிறுகதைத் தொகுப்பு இந்த -ஸ்ரீரங்கத்து தேவதைகள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒருவித எழுத்து நடை இருக்கும், ஆனால் சுஜாதா அவர்களின் எழுத்து நடையில் ஒருவித யுனிக்னெஸ் இருப்பதை அவரின் புத்தகங்களைப் படித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருக்க முடியும். பொதுவாக சுஜாதாவின் புத்தகங்களைப் புதிதாகப் படிப்பவர்களுக்கு இரண்டு மூன்று பக்கத்திற்கு குழப்பமிருக்கும், ஆனால் தொடர்ந்து படிக்கும் போதுதான் அந்நடையின் உயிரோட்டம் புரிந்து, கதையில் கூறப்படும் செய்திகள் கண்முன்னே கானல்நீர்ப் போலத் தோன்றும்.
இப்புத்தகத்தை வாசித்து முடித்த அனைவருக்கும் முதலில் வரும் ஐயப்பாடு, புத்தகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையா அல்லது நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிகளா? என்பதாக இருக்கும். இங்குதான் சுஜாதா அவர்களின் இன்னொரு வெற்றி நிகழ்ந்திருக்கிறது.
சிறு சிறு கதைகளாக மொத்தம் பதினான்கு, அதில் முதல் கதையில் வரும் பாத்திரங்களில் ஒருவரே அடுத்த பகுதியின் நாயகன்/நாயகியாக இருப்பார். கதை சொல்லப்படும் விதம் எழுத்தாளர் நமக்கருகில் நின்று சுட்டிக்காட்டுவது போல் பயணிக்கும். கதையை வாசிக்கும் பொழுது சில நேரங்களில் நம் உதட்டருகில் ஒரு மெல்லிய புன்னகையும், சில நேரங்களில் சோகமும் சூழ்ந்துகொள்வது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.
கதையின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலைத் தனியே பிரித்து வைத்தது போல் தெரியாமல், அவ்வாழ்த்தே கதைக்குள் அமைந்து கடவுளுக்குக் கடிதம் என்று தொடங்கும். கதையைப் படிக்கும் போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் கீழ்ச் சித்திரை வீதியும், கோட்டை வாசலும், கீழ் வாசலும் நம் கண் முன்னே தெரியும்.
கதையில் வரும் பாத்திரங்களின் பெயர் அவர்களின் கேரக்டரருக்குப் பொருத்தமாக இருக்கும். கோவிந்து பைத்தியம், ரங்கு, உள்ளூர் இன்டெலக்சுவல் ராவிரா, பணக்காரன் தாஸ், குண்டு ரமணி, கணக்கு வாத்தியார் விஜிஆர், பிரபந்தம் திண்ணா, வரதன், பாட்டி (நிஜக்கேரக்டர்), ஜீனியஸ் ரங்கநாதன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் முன்னோட்டம் அளித்திருக்கும் விதம் இன்னும் அருமை.
அதேபோல கதையை சஸ்பென்சாக முடித்திருக்கும் விதம், வாசகர்களின் கற்பனைக்குள் பொருந்துவதாகவும், அன்றைய நிலையில் அச்சமூகத்தில் பொதுவாக இருந்த நிகழ்ச்சிகள் குறித்து முற்றுப் பெறும். கதையின் முடிவு முன்பகுதியில் வந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியை அல்லது பொருளை தொடர்பிட்டு முடியும். உதாரணத்திற்கு,
~சின்ன `ரா` வின் முடிவில் வரும் - `செல்வம் இப்போதெல்லாம் படிக்கிறான்`, இதில் படிக்கிரான் – சின்ன ரா??~
~திண்ணாவின் சாதனையை `வீழ்ச்சி’ என்று என்னால் சொல்ல முடியவில்லை~
~மல்லிகா கோபாலனை கல்யாணம் பண்ணிக் கொண்டு அதே வீட்டில் அவள் அம்மாவைப் போல் நிற்கிறாள். அவர்கள் பெண் (மற்றொரு மல்லிகா) வாசலில் சிரித்துப் பேசிக் கொண்டே பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருக்கிறாள்~
அதே போல் குண்டு ரமணியின் பாத்திரத்தைப் போல் வரும் ஒருவரை நம் தெருவில் நிச்சயம்சந்தித்திருப்போம்.
ஒரு சில இடங்களில் நல்ல பன்ச் டயலாக் மறைந்திருக்கும். எடுத்துக்காட்டாக, `கோவிந்தின் அம்மா சக்கரத்தாழ்வாருக்கு இன்னும் நெய் ஊற்றிக்கொண்டுதான் இருக்கிறாள்’ என்று பைத்தியத்தை தெளிவிக்க தீபம் மட்டும் போதாது என்று கடவுளுக்குக் கடிதம் என்ற கதையை முடித்திருப்பார்.
~எனக்கு யார் மேலோ கோபம் வந்தது, ஒருவேளை ஸ்ரீரங்கத்து பெருமாள் பேரில் இருக்கலாம்~ என்று தன்னுள்ளிருக்கும் ஆதங்கத்தைச் சொல்லியிருப்பார்.
கிருஷ்ணசாமியின் டாமினென்ட் கேரக்டரை விவரிக்க, சரித்திரத்தில் சர்வாதிகள் பலரும் குள்ளமாக இருந்ததாகக் கேள்விப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பார்.
அதேபோல் அந்த வயதிற்குத் தோன்றும் கலர்புல்லான மசாலா எண்ணங்களை ஆங்காங்கே சிதறவிட்டிருக்கும் விதம் அவ்வயதைக் கடந்து வந்த அனைவராலும் தொடர்புபடுத்திக்கொள்ள இயலும் – வரதனுக்கு அவன் மாமா அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் பிரத்யோகப் படங்கள்! வீரசிம்மன் கதையில் திரை வழியாக சில்க் ஆசாமி கண்ணடித்த விதம், சிவராமன் வத்சலாவைப் பார்க்க வருவது, திருச்சி பார்பர் ஷாப்பில் இருக்கும் சீன அழகிகளின் போட்டோ, ஹரிதாஸ் படத்தில் வரும் வெட்டப்பட்டக் காட்சி என்று அந்த வயதில் தோன்றும் எண்ணங்களை பட்டியலிட்டிருப்பார்.
சில நேரங்களில் நண்பர்களின் மத்தியில் நாம் ஒப்புக்குச் சப்பாணியா நிற்பதையும், விளையாடும் போது நண்பர்களில் ஒருவன் அங்கிருக்கும் அனைவரையும் ஆதிக்கம் (டாமினேட்) செய்வதும், அதைக் கண்டு நாம் பொறாமைப் படுவது போன்ற இயல்பான விஷயங்களைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களில் என்னை மிகவும் கவர்ந்தது அவர் பாட்டியின் கேர்க்டர் தான். சுஜாதா அவர்களின் சிறு வயதில் பெரும்பாலும் பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்ததையும், பாட்டியின் கண்டிப்பையும் கதை முழுவதும் பார்க்க முடியும். தனியே அழைத்து வந்து தண்டிப்பதையும், பிறர் முன் தன்னை விட்டுக் கொடுக்காமல் பாட்டி பேசியதை மிக அழகாகக் கூறியிருப்பார்.
அதே போல சிறு வயதில் தான் செய்த தவறுகளில் ஒன்றான திருட்டு வேலையையும், அதனால் பின்னாளில் அவரடைந்த வலியையும் அதன் தொடர்ச்சியையும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருப்பார்.
என் பார்வையில் ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது புத்தகத்தை வாசிக்கும் வாசகர்களுக்கு, அதில் வரும் அடுத்த பக்கத்தைப் புரட்டும் ஆவல் முடிவில்லாமல் தொடர்ந்து வரவேண்டும்; மேலும் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகும் அதில் வரும் ஏதாவதொரு நிகழ்ச்சி அல்லது பாத்திரம் (கேரக்டர்) மனதில் நிலைக்க வேண்டும். சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லுவதெல்லாம் அதற்குப் பிறகுதான்.
ஒரு நல்ல புத்தகத்தை வாசித்தது போன்ற உணர்வு தோன்றுகிறது.
Be the first to rate this book.