ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெரிந்தவுடன், பலர் அவரைத் தங்கள் கோணத்தில் பார்த்தனர். இறைவனை அடைய வேண்டும் என்று பக்குவப்பட்டவர்கள்கூட இறைவனை சீக்கிரமே அடைந்திட அவரை நாடினர். ஆனால், அத்தகைய அவசரக்காரர்களுக்கு ரமணர் இசைந்து கொடுக்கவில்லை. உள்ளத்தில் உண்மையாக இருந்தவர்களும், அப்படி உண்மையாக இருந்து யோகத்துக்குப் பக்குவப்படாதவர்களும் அவரிடம் பயப்பட்டதே இல்லை! ஞான மார்க்கமும், வைராக்கியமும் சிறந்தவைதான். அதன் வழியாக சீக்கிரத்தில் இறைவனை அடையலாம் என்றாலும் அது ஆயிரத்தில் ஒருவருக்கே வாய்க்கும். அதற்கு பக்குவப் படாதவர்களுக்கு பக்தி மார்க்கத்தையும், குரு சேவை மார்க்கத்தையும் வலியுறுத்தியவர் ரமணர். ஆகவேதான் கொஞ்சம் அகங்காரம் உள்ளவர்களுக்கும், மனத் தெளிவு இல்லாதவர்களுக்கும் அவருடைய செயல் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. எது எப்படியிருந்தாலும் அவருடைய சந்நிதியில் உட்கார்ந்தவர்கள் மன நிம்மதியை அடையாமல் போனது இல்லை என்பதே அந்த மகானின் கருணை வெள்ளம். இவை அனைத்தையும் தனக்கே உரிய எழுத்து வன்மையுடன் சக்தி விகடனில் தொடராகப் படைத்தார் பாலகுமாரன். அதன் தொகுப்பாகிய இந்த நூலின் மூலம் ரமணர் என்ற இறைவனுடன் வாசகர்கள் கலந்து பேரின்பம் அடையலாம் என்பது நிச்சயம்.
Be the first to rate this book.