காந்தியும் அரவிந்தரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் காலனியாக இருந்த இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு சுதந்திர நாடாக ஆக்குவதைத் தங்கள் இலக்காகக் கொண்டுத் இந்தியாவில் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கினர். ஆனால் சுதந்திரப் போராட்டம் குறித்த பார்வைகள் இருவருக்கும் முற்றிலும் எதிர் எதிராக இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் ஊடாக வீழ்த்திவிடும் அணுகல் முறையை அரவிந்தர் தேர்வு செய்தார். அவருடைய மாணிக்டோலா (Maniktala) தோட்டம் ஒரு வெடிகுண்டுத் தொழிற்சாலையாகவும் இருந்தது. வெள்ளை அதிகாரிகள் தாக்கிக் கொல்ல இளைஞர்கள் தூண்டப்பட்டனர். குற்றவாளிகள் அன்றைய பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டனர். இந்தப் பின்னணியில்தான் காந்தியின் இந்திய அரசியல் நுழைவு தீவிரம் பெருகிறது. பெருந்திரளாக மக்களைத் திரட்டி வன்முறையற்ற அகிம்சா முறையில் பிரிட்டிஷ் அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் அவரது அணுகல் பெரிய அளவில் மக்களின் ஆதரவைப் பெற்றது. அரவிந்தர் புதுச்சேரி வந்து ஆன்மீகத் தேடலைத் தன் எஞ்சிய காலவாழ்க்கையாக அமைத்துக் கொண்டார். எனினும் விடுதலைப் போராட்டத்தில் பெரும் திசை மாற்றத்தை உருவாக்கிய காந்தியை அவர் இறுதிவரை வெறுத்தவராகவே வாழ்ந்து மறைந்தார். காந்தி எந்நாளும் அரவிந்தரைப் பகையாய் அணுகவில்லை. அவரைச் சந்திக்கவும் உரையாடவும் அவர் பலமுறை முனைந்தார். ஆனால் அந்த முயற்சிகளை இறுதிவரை மூர்க்கமாக மறுத்தார் அரவிந்தர். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் உருவான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திசைமாற்றத்தை மிக நுணுக்கமாகவும் ஒரு துப்பறியும் நாவலுக்குரிய வேகத்துடன் முன்வைக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.