பால் லஃபார்க் - பூர்வீகம் ஹாய்த்தி நாட்டைச் சேர்ந்தவர்.கியூபாவில் பிறந்தவர். "பிறப்பிலேயே நான் சர்வதேசவாதி" என்று இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார்.கறுப்பினம்,ஜமாய்க்கா இந்தியர்,பிரெஞ்சு கிறித்தவர்,யூதர் என்ற நான்கு இனங்களும் இவர் மீது உரிமை கொண்டாட முடியும்.
1842 ல் பிறந்த இவர் 1911 வரை வாழ்ந்தார். பிரெஞ்சு கம்யூனிச இயக்கத்தின் தோற்றுவர்களில் ஒருவர்.அதற்கு முன்னோடியாக பிரெஞ்சு சோஷலிச கட்சியை நிறுவியவர்.கியூபர்களும் கறுப்பின மக்களும் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கு தத்தமது பங்களிப்பாக இவரைக் குறிப்பிடுவார்கள்
லண்டனில் காரல்மார்க்சின் நேரடிச் சீடர்களில் ஒருவராக இருந்தவர் பால் லஃபார்க். மாலை நேரங்களில் இருவரும் நடைப்பயணம் செல்லும் போது மார்க்ஸ் இவருக்கு தனது மூலதனம் நூலின் கருத்துக்களை எடுத்துரைப்பார். மார்க்சுக்கு மூலதனம் நூலின் தயாரிப்பில் அவரது இரண்டாவது மகள் லாரா உதவியாளராக இருந்தார்.எனது பெண்மக்கள் மூவரில் லாராவே மிகப்பெரிய அழகி என்று அம்மா ஜென்னி குறிப்பிடுவார்.
பால் லஃபார்க்கும் லாராவும் காதலித்து 1868ல் திருமணம் புரிந்து கொண்டனர்.லாராவும் லஃபார்க்கும் இணைந்து பிரெஞ்சு மொழிக்கு மார்க்ஸ்-எங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்தனர்.
கீழ்க்கண்ட நூல்கள் பால் லஃபார்கின் எழுத்துக்களில் முக்கியமானவை: உழைப்பிலிருந்து விடுதலை, சொத்தின் வரலாறு, மூலதன மதம்.
உழைப்பிலிருந்து விடுதலை என்னும் நூல் முதலாளிய உழைப்பு , அறம் தொழிலாளி வர்க்கத்தை முதலாளியத்திற்கு அடிமைப்படுத்தும் மிகபெரும் ஆயுதம் என விவாதிக்கிறது. எனவே உழைப்பு எனும் முதலாளிய ஒழுங்கிலிருந்து தொழிலாளர்கள் முதலில் உளவியல் ரீதியாக விடுபட வேண்டும் என வாதிடுகிறது.
புரட்சிக்காரர்கள் முதலில் தம்மிடமுள்ள உடமை வர்க்க குணாதிசியங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பது லஃபார்க்கின் பொதுவான நிலைப்பாடாகும். மார்க்சியக் கலாசாரத்திற்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுவார். வர்க்கப் போராட்டத்தின் வடிவங்களில் கருத்தியல் வடிவங்களுக்கு அவர் முன்னுரிமை வழங்குவார்.
லஃபார்க்கை அந்தோனியோ கிராம்சியுடன் சிலர் ஒப்பிடுகின்றனர்.மூலதனத்தையே (பணத்தையே) கடவுளாக வழிபாடும் நவீன முதலாளிய வாழ்வைக் கேலிக்குள்ளாக்கும் ஒரு சித்தரிப்பு அவரது மற்றொரு படைப்பான மூலதன மதம் என்ற நூலில் உள்ளது.
சொத்தின் வரலாறு: நாடோடிக் காலத்திலிருந்து நாகரீகக் காலம் வரை என்ற லஃபார்க்கின் நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
மார்க்சிய அரசியல் பொருளாதாரம் மானுடவியல் போன்ற துறைகளுக்குக் கோட்பாட்டுப் பங்களிப்பை வழங்கும் நூலாகும்.
மானுடவியலின் உண்மையான விவிலியம் என்று இந்நூலை ஒரு விமர்சகர் பாராட்டுகிறார்.
1840 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அராஜக சிந்தனையாளர்களான பியர்ஜோ செஃப்புரௌதன் சொத்து என்றால் என்ன? என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல்,அந்நாட்களில் காத்திரமான அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கிடையில் வலுவான சலனங்களை ஏற்படுத்தியது. சொத்து என்பது திருட்டு என்ற கருத்தை அந்நூலில் புரௌதன் முன்வைத்தார்.
லஃபார்கின் சொத்தின் வரலாறு என்ற நூல் ஒரு வகையில் புரௌதனின் நூலைத் தொடர்கிறது.இருப்பினும்,சொத்து எனும் விடயத்தை லஃபார்கின் நூல் வரலாற்று பொருள்முதல்வாதத்தின் மையப் பிரச்சினைகளில் ஒன்றாக மாற்றுகிறது.
மார்க்ஸ்சினுடைய மூலதனம்நூலின் பல இடங்களில் பேசப்பட்டுள்ள கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன என்று ராபர்ட் பில்ஸ் என்ற இந்நூலின் 1890 ஆம் ஆண்டின் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார்.
1884 ல் எங்கெல்ஸ் எழுதி வெளியிட்ட குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் பிரச்சினைகளை லஃபார்க்கின் இந்நூல் தொடர்கிறது என்றும் சொல்லலாம். வாசிப்பே மிகச்சிறந்த உலகை உருவாக்கும், ஆகவே வாசியுங்கள்.
Be the first to rate this book.