காலனி ஆட்சியின் கீழும் வட அமெரிக்க பொம்மை அரசுகளின் கீழும் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிய காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவிய அரசியல் பொருளாதார சமூகப் பின்னணியை எழுத்தாளர்கள் தமது படைப்புகளின் வாயிலாகப் படம்பிடித்துக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பே 'சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்'. வரலாறு, பண்பாடு, எதார்த்தம் ஆகிய இழைகளைக் கொண்டு பின்னப்படும் கதைகள் முப்பரிமாணக் காட்சிகளாக கண்முன் விரிகின்றன. மடியாத விடுதலை வேட்கையும், ஒடுக்குமுறையை முறியடிக்கப் பீறிட்டெழும் கலகத்தின் ஓசையும் சேர்ந்து படைப்பு எதிர்ப்பின் குரலாகிறது. இந்த எதிர்ப்புக் குரல் சிறைவாசம், சித்திரவதை, நாடுகடத்தல், படுகொலை உள்ளிட்ட பல வடிவங்களில் அமுக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்ச அரசு ஒடுக்குமுறையை எதிர்கொண்டவர்கள் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களே.
காதல், காமம், வறுமை, நோய், நம்பிக்கை, மனப்பிறழ்வு, நகைச்சுவை, அவலச்சுவை, வன்முறை, மனிதநேயம் போன்ற உணர்வுகளை முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களில் வெளிப்படுத்தி நம்மைத் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன இச்சிறுகதைகள். இத்தொகுப்பிலுள்ள லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், ஒருபுறம் அன்பின் எல்லையில்லா வியாபகத்தைக் கலையழகு கொஞ்சும் நடையில் பின்னி நெஞ்சை உருக்கும் கதைகளாகவும், மறுபுறம் குரூரத்தைத் தோலுரிக்க சிற்பம் போல் கச்சிதமாக செதுக்கப்பட்ட நடையில் நெஞ்சைக் குத்திக் கிழிக்கும் கதைகளாகவும் வாசகரின் மனசாட்சியை உலுக்கும் வலிமை படைத்தவையாக உள்ளன.
Be the first to rate this book.