இதுவரை வெளியான மொழி வரிசை நூல்கள் ஒருவகையான உழைப்பைக் கோரியவை என்றால் இந்நூல் என் ஒட்டுமொத்த உழைப்பையும் வடித்தெடுக்கக் கோரியது.
இந்தப் பதினொரு நூல்களில் பல நூல்களில் ஏற்கெனவே பன்முறை கற்பிக்கப்பட்ட இலக்கணக்கூறுகளை, மொழிச்செய்திகளை என் வழியில் கூறியிருக்கிறேன். அவற்றில் நான்கு நூல்களில்தாம் புதிய தடம்பிடித்து ஆராய்ந்து எழுதிய வலிமையான கட்டுரைகள் மிகுதி. மொழித்திறம், அருஞ்சொற்பொருள், பிழையில்லாத எழுத்து, சொல்லேர் உழவு ஆகியனவே அந்நான்கு.
இந்நூற்கட்டுரைகள் நக்கீரன் இணையத்தில் தொடர்ந்து வெளியானபோது அளப்பரிய வரவேற்பினைப் பெற்றன. கடல்கடந்த நாடுகளில் உள்ளவர்கள் பலரும் இத்தொடர்வழியே என்னை அறிந்தார்கள். எண்ணற்ற புதிய தமிழ்நெஞ்சங்கள் நட்பாயின. கட்டுரைகளில் அவ்வளவு எளிமை உண்டு. பொறியியல் பாகங்களை விளக்குவதுபோல் சொற்களை விளக்கியுள்ளேன்.
எண்ணமும் எழுத்தும் பேச்சும் பாட்டும் என யாவும் சொற்களே. சொற்கள்தாம் கருவிகள். தமிழ்ச் சொற்கள் தோன்றி நிலைபெற்ற மொழித்தடத்தினை விளக்குகிறது இந்நூல். சொற்களின் தோற்றுவாய் முறைகளை அறிந்துவிட்டால் ஒரு சொல்லைத் தவறாகப் பயன்படுத்தமாட்டோம். புதிதாய்ப பலப்பல சொற்களை ஆக்குவோம். சொல் தோற்றமுறைகளையும் சொல்லறிவு பெறும் முறைகளையும் விரிவாகவும் ஆழமாகவும் எளிமையாகவும் விளக்குகின்ற நூல்.
மொழிச்சொற்களை முழுமையாய் நுனித்துணர்த்தும் நூல்.
Be the first to rate this book.