நமது அன்றாடப் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறும் ஐம்பது ஆங்கிலச் சொற்களைத் தேர்வு செய்து அவற்றிற்கு நிகரான தமிழ்ச் சொற்களை ஆய்வு நோக்கில் நிறுவியிருக்கிறார் ம. இராசேந்திரன்.
ஆங்கிலத்தில் இன்ன சொல்லுக்கு இன்ன பொருள்; இதைத் தமிழில் இந்த சொல்லால் குறிக்கலாம் என்கிற பாணியில் இவர் எழுதவில்லை. ஆங்கிலச் சொல்லுக்குரிய பொருள்; அந்தப் பொருளையுணர்த்தும் தமிழ்ச் சொற்கள். அவை இலக்கியத்திலும் மக்கள் வழக்கிலும் எங்கெங்கெல்லாம் பயின்று வந்திருக்கின்றன; அவற்றில் மிகவும் பொருத்தமுடைய சொல் எது, ஏன்? இவ்வளவு ஆய்வு நோக்கு இருக்கிறது ஒவ்வொரு சொல் தேடலிலும். மேலும் எல்லாச் சொற்களுக்கும் எளிய தமிழ்ச் சொற்களையே தேர்வு செய்திருப்பது (வாட்ஸ் அப் = கட்செவி அஞ்சல்; நோட்டா = வேண்டா; ஹேங் = தொங்கல்) சிறப்பு.
ஒவ்வொரு சொல் தேர்விலும் தொல்காப்பியம், வீரசோழியம், திருக்குறள், குறுந்தொகை, சிலப்பதிகாரம், தேவாரம் போன்றவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டிருப்பதால் வாசிப்புச் சுவை கூடுகிறது.
தொல்பொருள் துறையினர் கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது அவற்றில் பலவும் சிதிலமடைந்திருந்த நிலையில், ஏற்கெனவே காலின் மெக்கன்சி படியெடுத்து வைத்திருந்த கல்வெட்டுப் படிகளே மூலமாகி விட்டன.
சங்க காலத்தில் ஒரே வீட்டில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த ஒருவர் பெயர் ஓர் இல் பிச்சைக்காரர். அவரைப் பற்றி பாடிய புலவரின் பெயர் ஓரில் பிச்சையார். இப்படி அரிய இலக்கிய, சமூகத் தகவல்கள் பலவும் நூல் முழுதும் ஊடும் பாவுமாக விரவியுள்ளன.
தினமணியின் தமிழ்மணி (சொல் புதிது) பகுதியில் தொடர்ந்து ஐம்பது வாரங்கள் வெளிவந்த பகுதி இது. இத்துடன் நூலாசிரியர் வானொலியில் தமிழ்மொழி குறித்து ஆற்றிய 32 சிற்றுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.