இனம், மதம், சாதியம், பால் நிலை, பொருளாதாரம் , அரசியல், பிராந்திய மேலாதிக்கம் …. என பல்வகைகளிலும் பல்தளங்களிலும் அரசுகளாலும், அமைப்புகளாலும், நிறுவனங்களாலும் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அனைத்துவகை ஒடுக்குதலையும், ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றுத் துயருடனும், அடக்குதலுக்கு எதிரான நியாமான எதிர்ப்புணர்வுடனும் இத் தொகுதியின் முழு உள்ளடக்கமும் பதிவு பெற்றுள்ளது முக்கியமானது.
பெருமளவிலான இவரது கவிதைகள் அரசியல் சார்ந்த உள்ளடக்கம் கொண்டவைதான். இலங்கை அரசியல், சமூக வாழ்வு தொடக்கம் , சர்வதேச அரசியல் வரை இவரது கவிதை உள்ளடக்கம் மிகப் பரந்தது. துணிவானது. சமரசம் அற்றது.சிவசேகரத்தின் கவிதைகளில் ஒடுக்கப்படும் மக்களுக்கான குரல் என்பதே அடிப்படை உள்ளீடாகும். அதே நேரம் இவரது கவிதைகளின் வழியாக வெளிப்படும் கவித்துவமும் இவரை இலக்கிய உலகில் , தவிர்க்க முடியாத ஒரு கவிஞனாக நிலை நிறுத்தி உள்ளது. எனினும் இவரது கவிதைகளைப் பற்றி இதுவரை எழுதியவர்களும் விமர்சித்தவர்களும் சிவசேகரத்தின் அரசியல் கருத்து நிலை பற்றியே பெருமளவு கவனம் செலுத்தியிருக்கிறார்களே தவிர அவரது கவிதையியல் பற்றியோ அல்லது அரசியலை நுண்ணிய கவிதா உணர்வுடன் அவர் வெளிப்படுத்திய பாங்கைப் பற்றியோ விரிவான எழுத்துக்கள் இன்னும் வரவில்லை.
அங்கதம், கேலி, துயரில் மிதக்கும் சொற்கள், ஆற்றுகைத் தன்மை வாய்ந்த மொழி, இயற்கையோடு இணைந்து வரும் நளினம், அறிவால் நெறிப்படுத்தப்பட்டு வரும் கோபம் என அவரது கவிதையியல் பல்வேறு அழகியல் பரிமாணங்கள் கொண்டன. இப்பொழுது இந்த பெருந்தொகை வழியாக அவரது முழுக் கவிதைகளையும் வாசிக்கும் போது அவரது கவித்துவ ஆற்றலும், முக்கியத்துவமும் மேலும் வெளிச்சம் பெறுவது நிகழும். இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தொடக்கம் மூத்தோர் வரையான வாசிப்பு, படைப்பு, எழுத்து, விமர்சனம், ஆய்வுத்துறை சார்ந்தவர்களுக்கு இப்படியான செம்மையான முழுத்தொகுப்பின் தேவை, பயன்பெறுமதி கொண்டதாகும். எதிர்காலத்தில் இவரது ”கவிதையியல் பற்றிய” விரிவான பார்வை கள் வெளிவரும் போது, தமிழ் இலக்கியத்தின் உள்ளீடு மேலும் ஆழப்படும் என்பது எமது நம்பிக்கையாகும்.
Be the first to rate this book.