வாய்பிளந்து கிடந்த கருத்த ஏரியை வெளுத்த மின்னல்கள் வெட்டித் துண்டாடின. நாங்கள் பரஸ்பரம் ஒட்டிச் சேர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம். குளிரினாலோ, பயத்தினாலோ அஸேல் நடுங்குவது போலத் தோன்றியது. நான் எனது மேல்கோட்டால் அவளைமூடி என் நெஞ்சோடு சேர்த்தணைத்தேன். அது எனக்கு அதிகப் பிணைப்பையும் சக்தியையும் தந்தது. என்னில் இவ்வளவு பிரியம் பெருகிக் கிடந்திருக்கிறது என்று அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். மற்றோர் ஆளைப் பாதுகாப்பது இவ்வளவு அதிகமாக ஆனந்தம் அருளுமென்று எனக்கு அதற்குமுன்பு தெரிந்திருக்கவில்லை. நான் அவளது காதில் முனகினேன். “சிவப்பு தலைக்குட்டையணிந்த என் சிறிய பாப்ளார் மரக்கன்று நீ! உனக்கு வேதனை தரும் எதையும், யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்.”
Be the first to rate this book.