கல்கியின் சிவகாமியின் சபதம், அவரது புகழ்பெற்ற நாவலனான ‘பொன்னியின் செல்வன்’ புதினத்துக்கு முன்னரே எழுதப்பட்ட ஒன்று. இன்றும் சிவகாமியின் சபதம் நூலுக்கு அத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘பொன்னியின் செல்வன்’ நாவலைவிட ‘சிவகாமியின் சபதம்’ நாவலே சிறப்பானது என்னும் இலக்கியச் சர்ச்சைகளை இந்த நிமிடம் வரை நாம் பார்க்கலாம். அந்த அளவுக்கு இலக்கிய ரீதியாக ‘சிவகாமியின் சபதம்’ முக்கியத்துவம் உடையது. நான்கு பாகங்கள் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிகப் பெரிய நாவலை இன்றைய தலைமுறையினர் எளிதில் வாசிக்கும் வண்ணம், அதன் கதைச் சுருக்கத்தை மட்டும் இங்கே அறிமுகப்படுத்தி இருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். கல்கி எழுதிய அதே அத்தியாயங்களின் வழியாக அவற்றின் சுருக்கத்தைப் படிப்பதன் மூலம், இன்றைய புதிய வாசகர்கள் கல்கியின் மூலநூலைப் படிப்பார்கள் என்பது நிச்சயம். அனந்தசாய்ராம் ரங்கராஜனின் ‘பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களின் சுருக்கம்’ என்ற நூல் பெற்ற மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்த நூல் வெளியாகிறது. நரசிம்ம வர்மனும் சிவகாமியும் காதல் கொள்ளும் தருணங்களும், விலகிப் போகும் தருணங்களும், தன் நாட்டுப் பெண் ஒருத்திக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க பழிக்குப் பழியாக புலிகேசியின் நாட்டை எரித்துத் தமிழரின் பெருமையை மாமல்லர் நிறைவேற்றும் தருணங்களும், எந்த வடிவத்தில் வாசித்தாலும் மனதை விட்டு அகலாதவை. இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள்.
Be the first to rate this book.