இந்நூலை ஒரு வரலாற்று ஆவணமாக மாற்றுவதிலேயே பதிப்பாசிரியர் பெருங்கவனம் கொண்டுள்ளமை தெரியவருகின்றது. கும்மிப் பாடலின் கருத்து விளக்கங்கள் சிறுசிறு தலைப்பிட்டு வரலாற்று நிகழ்வுகளாகத் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளோடு ‘சிவகங்கைச் சீமை வரலாற்று நிகழ்வுகள்: ஒரு கண்ணோட்டம்’ எனும் பகுதி சிவகங்கைச் சீமையின் வரலாற்றுச் செய்திகளை ஆண்டு அடிப்படையில் விவரித்துச் செல்வதை அறியமுடிகின்றது. 1736ஆம் ஆண்டு தொடங்கி 1911 வரையிலான வரலாற்று நிகழ்வுகள் முதன்மையானவை. இவை நூலின் கருத்தோடு ஒப்பிடும்வண்ணம் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. தவிர இருபதிற்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை ஆராய்ந்து, அவற்றில் உள்ள செய்திகளின் அடிப்படையில் அடிக்குறிப்புகள் தரப்பட்டுள்ள தன்மை இந்நூலை ஒரு வரலாற்று ஆவணமாக மாற்றியுள்ளது.
ஓர் இலக்கியமாக இக்கும்மியைப் படித்துத் துய்ப்பதற்கேற்ற பதிப்புமுறைகளும் இந்நூலில் உண்டு. உ.வே.சா. நீண்ட அகராதிகளைப் பின்னிணைப்பாகத் தருவது போன்று இப்பதிப்பாசிரியரும் மாந்தர் பெயர், தெய்வப்பெயர், நாடு; நகர்; ஆறு பெயர்கள், அருந்தமிழ்ச்சொற்கள்,
வடசொற்கள், பிறமொழிச் சொற்கள் எனப் பல தலைப்புகளில் அகராதிகளை உருவாக்கியுள்ளமை பாராட்டிற்குரியது. கும்மிப்பாடல் பற்றிய இலக்கிய வரலாற்றுச் செய்திகளும் கும்மிப்பாடல் பட்டியலும் இந்நூலுக்குக் கூடுதல் சிறப்பினைத் தந்துள்ளன.
சிவகங்கைச் சரித்திரக்கும்மி என்னும் கும்மிப்பாடல் நிகழ்த்துகலை வடிவம் பெறத்தக்கதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மகளிர் கூடி வட்டமாக நின்று கும்மி அடித்துப் பாடத்தக்க வகையில் இசை வடிவம் பெற்றதாகவும் இது அமைந்துள்ளது. நீண்ட இலக்கியமாக அமைந்துள்ள இச்சிற்றிலக்கியத்தை நிகழ்த்துகலைக்கு ஏற்பக் கால அளவைச் சுருக்கு மகளிர்க்குப் பாடம் சொல்லி அரங்கேற்ற வாய்ப்பும் உள்ளது.
பதிப்பாசிரியர் ஆ.மணி அவர்கள் நாட்டார் வழக்காற்று மரபு பற்றி நீண்டதொரு விளக்கத்தைத் தந்துள்ளார். நாட்டார் வழக்காற்றில் கும்மிப்பாடல் பெறும் இடம் எது என்பதை மதிப்பீடும் செய்துள்ளார். நாட்டுப்புற வழக்காற்று இலக்கிய வகைமையாக இதனைக் கருதுதல் வேண்டும் எனும் கருத்தியலைப் பகுதி இரண்டில் மிக விரிவாகத் தந்துள்ளதைக் குறிப்பிடுதல் வேண்டும்.
நிகழ்த்துகலை மரபிலிருந்து தோற்றம் பெற்ற நாட்டார் வழக்காற்றுப் பனுவல் ஒன்று செவ்விலக்கியத் தன்மையோடு வரலாற்று ஆவணமாக உருவான நிலையை இந்நூல் மிக விரிவாகவே விளக்கி இருக்கிறது. இன்றைய ‘வரலாறு எழுதுதல்’ எனும் அரசியல் சார்ந்த கருத்துநிலையில் ஒரு வட்டாரத்தின் வரலாறாக ஒரு குடி சார்ந்த வரலாறாக வல்லாண்மையை எதிர்த்து வீழ்ந்து விளிம்புநிலை நோக்கி உந்தப்பட்ட ஒரு வரலாற்றை மீண்டும் மையத்திற்குள் கொண்டு வரும் ஒரு வரலாறாக இந்நூல் உருவாக்கம் கொண்டுள்ளது. இதற்காக நூலாசிரியர் பாராட்டத்தக்கவராகிறார்.
- முனைவர் சிலம்பு நா. செல்வராசு
Be the first to rate this book.