நம் இளைய தலைமுறையினரிடையே இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நம் தமிழ்க் கலாசாரத்தைக் காக்கவும், பாரம்பர்யங்களை மீட்டெடுப்பதிலும் விழிப்புஉணர்வு அடைந்திருக்கிறார்கள். பீட்ஸா, பர்கர் போன்ற அந்நிய உணவு வகைகளுக்கு தங்கள் ஆரோக்கியத்தை தின்னக்கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நம் பாரம்பர்ய உணவுகளின் அவசியத்தை உணரத் தொடங்கிவிட்டனர் என்பதே அந்த மாற்றம். வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம், பனிவரகு போன்ற சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்து, ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் அளிக்கும். காலை, மதியம், மாலை, இரவு என வேளைக்கு ஏற்ப சிறுதானியங்களால் விதவிதமான உணவுகளை சுவையாக செய்து அசத்தமுடியும் என்று மொத்தம் 100 ரெசிபிகள் கொடுத்து அசத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர்.
ஒவ்வோர் உணவுக்கு முன்பும் அந்தத் தானியத்தின் நன்மைகளையும் உணவின் சிறப்பையும் கூறியிருப்பது சமைக்கும் ஆர்வத்தைக் கூட்டுகிறது. மட்டுமன்றி விசேஷநாட்கள் மற்றும் பண்டிகைகளுக்கு ஏற்ப சிறுதானியத்தில் பலகாரங்களும் எளிதில் செய்து அசத்த முடியும் என்கிறார். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும்கூட சிறுதானிய உணவுகளைத் தயாரிக்க முடியும் என்பதை செய்முறையுடன் விளக்கப்பட்டுள்ளது இந்த நூல். புத்துணர்ச்சி பெறவும் உடல் பாகங்களைச் சீராக இயங்கச் செய்யவும் நலமான வாழ்வைத் தரும் ஒரே உணவு நம் பாரம்பர்ய உணவு மட்டுமே. சிறுதானிய உணவுகளால் ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்குவோம். சிறுதானியத்தில் எப்படி சுவையாக சமைக்கலாம் என முயலும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.
Be the first to rate this book.