2013ம் ஆண்டு நவம்பர் 5ந் தேதி பூமியில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இந்த நிகழ்வுகளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அறிவியல் திறனோடு எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் நேர்முக வர்ணனை செய்வதைப் போல தினத்தந்தியில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். செவ்வாய்ப் பயணம் ஏன்? செயற்கைக்கோள் பற்றிய தகவல்கள், செயற்கைக்கோளின் வடிவமைப்பு, பயண வழியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? போன்ற பல்வேறு தலைப்புகளில் 48 வாரங்கள் வாசகர்களின் கையைப் பிடித்துக் கொண்டு செவ்வாய்க் கிரகத்திற்கே அவர் அழைத்துச் சென்றார். சரியான பயண நேரம், சரியான பயண பாதை, எரிபொருளைச் சேதம் செய்யாத சிக்கனச் செயல்பாடுகளால் செவ்வாயை அடைந்த செய்திகளைச் சுவைபட எடுத்துச் சொன்னார்.
அந்தத் தொடர் எல்லா தரப்பினரையும் குறிப்பாக மாணவர்களை பெரிதும் கவர்ந்தது. அது இப்போது "சிறகை விரிக்கும் மங்கள்யான் கையருகே செவ்வாய்" என்ற தலைப்பில் தினத்தந்தி பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் அரிய வண்ணப்படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
"அறிவியல் தமிழை படித்தவர் முதல் பாமரர் வரை அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பதே எனது எழுத்தின் லட்சியம்" என்று மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். அதை அவர் தனது அறிவார்ந்த எழுத்துகளால் சாதித்திருக்கிறார்.
மயில்சாமி அண்ணாதுரை
இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை 2008-ல் சந்திரயான்-1 செயற்கைக்கோளின் வெற்றிக்குப் பின் வெகுவாக முன்னேறியுள்ளது. அதன்மூலம் நமது ‘கையருகே நிலா’வைக் கொண்டு வந்து நமது நாட்டுக்கு உலக அரங்கில் பெரும்புகழ் பெற்றுத் தந்தார் அறிவியலாளர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை. 2013-14-ல் மங்கள்யான் உருவாக்கத்திலும் வெற்றியிலும் பெரும்பங்கு ஆற்றியவர். மங்கள்யான் பூமியை விட்டுக் கிளம்பி செவ்வாய்க் கிரகம் சென்றடையும் வரை ஞாயிறுதோறும் ‘தினத்தந்தி’ மூலம் அதன் செயல்பாடுகளைப் பற்றிய தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். இதனை இப்போது புத்தக வடிவில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குப் படைக்கிறோம். மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் அறிவியல் திறனுடன் கலந்த மொழித் திறன் தமிழ்மொழிக்கு மேலும் ஒரு சிறந்த அணிகலன் என்பது தமிழ் நெஞ்சங்களின் ஏகோபித்த கருத்து.
Be the first to rate this book.