பள்ளிக்கூடத்தில் அழுதுகொண்டே சேர்ந்தது, தெருவில் கோலி, பம்பரம், கிரிக்கெட் விளையாடியது, வீட்டில் குறும்புகள் செய்து அடி வாங்கியது, க்ளாஸை கட் அடித்து சினிமாவுக்குப் போனது, கொஞ்சம் வயதுக்கு வந்ததும் பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் காதல் வயப்பட்டது... மனத்திரையை யார் ரீவைண்ட் செய்தாலும் இப்படி சின்ன வயது நினைவுகள் அடுக்கடுக்காக ஓடி மகிழ்விக்கும்! மறக்க முடியாத அந்தச் சம்பவங்களை அசைபோடும் போதெல்லாம் அது ஒரு பொற்காலம் என்று மகிழ்ச்சி கொள்ளவும், அந்த நாட்கள் மீண்டும் திரும்பி வராதா என்று ஆதங்கப்படவும் வைக்கும்! இளமை நாட்களின் சம்பவங்களை எல்லோரும் எழுத்தில் பதிவு செய்வதில்லை; செய்யவும் முடியாது. அந்த வகையில் பேனா பிடிப்பவர்கள் பாக்கியசாலிகள்! ஆர்.கே.நாராயண் மாதிரியான எழுத்தாளர்கள் தங்களது சின்ன வயது ஞாபகங்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். தமிழிலும் ஒரு சிலர் பதிவு செய்திருக்கிறார்கள். 1985ல் தனது சின்ன வயது அனுபவங்களை விகடனில் மெரீனா தொடராக எழுதியபோது அவை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
Be the first to rate this book.