குழந்தைகளின் விளையாட்டுகள் பொழுதை போக்குவதன்று, பொழுதை ஆக்குவதாகும்! மனிதனை முழுமையாக்குவதில் விளையாட்டின் பங்கு அளப்பரியவை. பண்டைய தமிழர்களின் பண்பாட்டு வெளி விளையாட்டும் பாடல்களும் நிரம்பியவை. மனிதப்பண்புகளை, சமூக அறங்களை, உழைப்பிலிருந்தும் இயற்கையிலிருந்தும் மனிதர்கள் கற்றுக்கொண்டார்கள்!
உளம், உடல் பலத்தை விளையாடும் போதுதான் குழந்தைகளால் பெற முடியும்! குழுவின் உழைப்பும் கூட்டுச்சிந்தனையுமே வெற்றியின் ஆதாரம் என்பதை விளையாட்டுக்கள் எல்லாக்காலங்களிலும் உணர்த்துகின்றன.
காலத்திற்கேற்ப குழந்தைகளின் விளையாட்டும் அவை சார்ந்த பாடல்களும் மாற்றமடைகின்றன. இன்றைய கல்விச் சூழலில் உலகமயமாக்கப்பட்ட மேலை நாட்டு விளையாட்டுக்களில் குழந்தைகள் ஈடுபட்டாலும் மண் சார்ந்த பாரம் பரியத்தை அவைகள் பிரதி பலிப்பதில்லை! தமிழர்களின் வரலாறு, பண்பாடு, பாரம் பரியம், கலை, வாழ்வியல் தடங்களில் பதிந்த சுவடுகள் மெல்ல... மெல்ல ... அருகி வருகின்றன.
இன்றைய குழந்தைகள் தெருவில் விளையாடுபவர்கள் இல்லை! தெரு வாகனங்களின் வன்முறைக்களமாய் மாறி விட்டது.
கூடி வாழ்ந்தாலும், விளையாடினாலும் கோடி நன்மை என்கிற பட்டறிவின் பாடம் அவர்களுக்கு வாய்க்கவில்லை! தொலைக் காட்சியிலும், கைபேசிகளிலும் நேரத்தை மட்டுமன்று. பொது வெளியில் கிடைக்கும் சமூக அறிவையும் சேர்ந்தே இழந்து வருகிறார்கள். தமிழை மறக்கும் குழந்தைகள் பாட்டிகளையும் பிறகு அம்மாக்களையும் மறந்து விடுவார்கள். மொழி சார்ந்த நல்ல பண்பாட்டை மீட்டெடுப்போம்! அருகியும், அழிந்தும் வரும் விளையாட்டுக்களுக்கும் பாடல்களுக்கும் புத்துயிர் கொடுக்க கல்விக் கூடங்கள் முன் வரவேண்டும்! மரபு சார்ந்த விளையாட்டுகளில் மூதாதைகளின் வரலாறு இருப்பதை குழந்தைகள் உணருவார்கள். உணர செய்வது பெற்றோர், ஆசிரியர்களின் கடமை! கடமையை செய்வோமா...?
Be the first to rate this book.