கடிதங்கள் அருகிவிட்ட காலகட்டத்தில், வண்ணதாசன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார். வண்ணதாசனின் சிறுகதையையோ, கல்யாண்ஜியின் கவிதையையோ வாசிக்கும் உணர்வை இந்தக் கடிதங்களும் கொடுக்கின்றன.
எட்டு வயதுக் குழந்தை முதல் கோணங்கி மாதிரியான எழுத்தாளர் கள் வரை வண்ணதாசனுக்கு எல்லாத் தளங்களிலும் நண்பர்கள் உண்டு என்பதை இந்த நூல் சொல்கிறது. ஒவ்வொருவருடனும் வண்ணதாசனுக்கு உள்ள அழகான உறவு கடிதங்களில் வெளிப்படுகிறது என்றால், அவர்கள் மீது வண்ணதாசன் கொண்டிருக்கும் அன்பும் மதிப்பும் அவர்களைப் பற்றி எழுதியுள்ள சிறுகுறிப்பில் தெரிகிறது.
புதியவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் தேர்ந்த எழுத்தாளராகவும், கந்தர்வன் போன்றோருக்கு எழுதுகையில் சக நண்பனாகவும், மருத்துவர் மாணிக்கவாசகத்துக்கு எழுதும்போது நன்றியுணர்வுடைய ஒரு முன்னாள் நோயாளியாகவும்… ஒரு மனிதனின் சகல பரிமாணங்களும் தெரிகின்றன. கோணங்கிக்கு அவருடைய இயற்பெயரான இளங்கோ என்ற பெயரைக் குறிப்பிட்டு எழுதும் அளவுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், ‘என் எழுத்தின் மேல் எல்லாம் அவனுக்குப் பெரிய அபிப்பிராயம் ஒன்றும் கிடையாது’ என்று சொல்லும் நேர்மையில் வியக்கவைக்கிறார். பேத்திக்குக் கதை சொல்லும் தாத்தாவாக, தன் வாசகரின் எதிர்வினைக்குக் காத்திருப்பவராக, இடதுசாரி எழுத்தாளர்களிடம் பாசம்கொண்டவராக, ஓர் இசை ரசிகராக, எஸ்.ராமகிருஷ்ணனின் உரைகளைக் கேட்க விரும்பும் சுவைஞராகப் பரிணமிக்கிறார். கடிதங்களில் வெளிப்படும் எளிமையும் நேர்மையுமே இந்தக் கடிதத் தொகுப்பை மனதுக்கு நெருக்கமாக்குகின்றன. எழுதும்போது தன்னால் நிறுத்த இயலாது என்பதை ‘பேனா முனையின் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைப்பது, இந்த நெரிசல் நேரத்தில் உகந்த காரியமில்லை’ என்கிறார் அற்புதமாக.
‘குழந்தைகளை விசாரித்ததாகக் கூறவும்’ என்றெழுதுகிற சம்பிர தாயங்களுக்கு மத்தியில் ‘விசாரிப்பைவிட, அவர்களைத் தொட்டுப் பேசவே விரும்புகிறேன். தொடுகைதான் ஆதி மொழி’ என்கிறார். அன்பை நேசித்து, அன்பைச் சுவாசித்து, அன்பில் உருகும் மனம் உள்ளவர் வண்ணதாசன் என்பதற்கு இந்தக் கடிதங்கள் இன்னொரு சாட்சி.
Be the first to rate this book.