முறையாக பள்ளி, கல்லூரிகளில் கற்கும் கல்வியே, மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. வாழ்க்கையின் அனுபவங்கள், சுயமுன்னேற்ற வழிகாட்டல்கள், புத்தகங்கள் மற்றும் பயிற்சிகள் போன்றவை மாணவர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அத்தகைய வாழ்வுக்கு நெல்லை கவிநேசன் எழுதிய இந்த நூல் சிறந்த வழிகாட்டுகிறது.
உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், குறிக்கோள் எங்கே? எதிர்மறை எண்ணங்களை ஒழிப்போம், கோபம் கொள்ளலாமா? எதிர் விளைவா, அமைதித் தீர்வா? கவலைகளை விரட்டுவோம். என்பன போன்ற பல தலைப்புகளில், பல்வேறு நிலைகளில் சிந்தித்து, வாழ்க்கையின் வெற்றி ரகசியங்களை உள்ளடக்கி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன? அந்தப் பிரச்சினைகளுக்குக் காரணங்கள் எவை? பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் யாவை? என்பன போன்ற கேள்விகளுக்கு எளிய சான்றுகளுடன் விரிவான விளக்கங்களை ஆசிரியர் அளித்துள்ளார். மாணவ-மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை தரும் உன்னத கட்டுரைகள். அவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
நெல்லை கவிநேசன்
நெல்லை கவிநேசன் (எஸ்.நாராயணராஜன்), திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுமார் 29 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் தற்போது வணிக நிர்வாக இயல்துறையின் தலைவர். விளம்பரம் பற்றி ஆய்வு செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றவர். இளைஞர்களின் முன்னேற்றத்திற்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, இளைஞர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளார். பல்வேறு வார, மாத மற்றும் நாளிதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் எழுதி எழுத்துத்துறையில் முத்திரை பதித்தவர். மேலும் ஆல் இந்திய ரேடியோ, ஹலோ எஃப்.எம். போன்ற வானொலிகளிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கல்வி ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகள் வழங்கியுள்ளார். கல்வி, ஆன்மிகம், சிறுகதை, தன்னம்பிக்கை, தொழில், வாழ்க்கை வரலாறு என பல்வேறு துறைகளில் 40&க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தினத்தந்தியில் ''மாணவர் ஸ்பெஷல்'' பகுதியில், ''பெர்சனாலிட்டியை வளர்த்துக் கொள்வது எப்படி?'' என்ற தலைப்பில் இவர் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் இடம்பெற்ற, ''பிறரோடு இணைந்து பழகுவது எப்படி?'', ''மன அழுத்தத்தை மாற்றுவது எப்படி?'', ''முரண்பாடுகளை கையாளுவது எப்படி?'' ஆகிய பகுதிகளை இணைத்து ''பழகிப் பார்ப்போம் வாருங்கள்'' என்ற தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.