ஜேஎன்யூ பல்கலையின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கின்றன. அவ்வளவு ‘அபாயகரமாக’ அவர் பேசியது என்ன?
பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளிடமுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாமின் உரையும் எழுத்துகளும் விவாதிக்கின்றன. காத்திரமான மாற்றுப் பார்வைகளை அவை முன்வைப்பதுடன், கல்விப்புல விவாதங்களை மக்கள்மயப்படுத்துகின்றன.
இன்றைய முஸ்லிம் அரசியல் தொடர்பான பல முக்கியமான விவாதங்களுக்கு இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும்.
பிஹார் மாநிலம் ஜெஹனாபாத்தைச் சேர்ந்தவர். 2006ல் தனது பள்ளிப் படிப்பை நிறைவுசெய்துவிட்டு பம்பாய் ஐஐடியில் பி.டெக் மற்றும் எம்.டெக் (கணினி பொறியியல்) படித்தார். அதன் பிறகு, நல்ல சம்பளத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவந்த அவர், நாட்டுப் பிரிவினை, பிரிவினைக்குப் பிந்தைய இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகள், கூட்டாட்சிமுறை, தேர்தல்கள் போன்றவற்றைப் படிப்பதற்காக அந்த வேலையை விட்டுவிட்டு பகுதிநேர வேலைகளில் சேர்ந்தார். பிறகு 2013ம் ஆண்டு டெல்லி ஜேஎன்யூவில் முதுநிலை நவீன வரலாறு படிப்பில் இணைந்தார். அதை முடித்துவிட்டு, 2015ல் அந்தப் பல்கலைக்கழகத்திலேயே வரலாற்றுத்துறை ஆய்வு மாணவரானார். TRT, The Wire, Firstpost, The Quint போன்ற பல்வேறு செய்தித் தளங்களிலும் இவரின் எழுத்துகள் தொடர்ந்து பிரசுரமாகி வந்தன.
இந்நிலையில், அலிகர் முஸ்லிம் பல்கலையில் நடந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் சில பகுதிகளைக் காரணம் காட்டி உபி, அஸ்ஸாம், டெல்லி உள்ளிட்ட ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகம் முதலான பல கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து அவரைக் குறிவைத்ததைத் தொடர்ந்து 2020 ஜனவரி 28ல் காவல்துறையிடம் சரணடைந்து சிறை சென்றார். அவர் சிறையிலிருந்த நேரத்தில் நடந்த வடகிழக்கு டெல்லி வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்டதாக பொய்ப்பழி சுமத்தி அவர்மீது உபா சட்டம் பதியப்பட்டது. அப்போதிருந்து சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளாக பிணை மறுக்கப்பட்டு சிறையிலேயே அடைக்கப்பட்டிருக்கிறார்.
Be the first to rate this book.