“காந்தி தனிநபரல்ல; ஓர் உணர்வு. நம்மில் பலரும் அந்த உணர்வை உள்வாங்கி வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். சிலரிடத்தில் சிறிய அளவிலும் சூட்சுமமாகவும் வெளிப்படும் இந்தத் தாக்கம் சிலரிடத்தில் அதிகமாகவும் கண்கூடாகவும் இருக்கிறது. அப்படி ஏதோஒரு விதத்தில் காந்தியின் தாக்கத்தைப் பெற்ற சில ஆளுமைகளின் நேர்காணல்களின் இந்தத் தொகுப்பு காந்தி என்னும் உணர்வை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்துகிறது”
~ எழுத்தாளர் அரவிந்தன்
ஒரு தனிமனிதரும் அவரது தத்துவ வழியும் இணைந்து பெருந்திரளான மக்களை அறத்தின் வழியே அழைத்துப்போகும் ஒளியென ஆகும்போது, அங்கே ஏந்தப்படும் எண்ணங்கள் செயலுரு பெறுகின்றன. காந்தி அத்தகு தன்மையுடைய தனிமனிதர். தன்னையறிதலின் முழுமைமைக்கு நெருக்கமான உணர்வுநிலைக் குறியீடே காந்தியும் காந்தியமும். காந்தியைத் தங்களுக்குள் மனதேற்றிக் கொண்ட சில ஆளுமைகளின் மனப்பகிர்வுகள் ‘செயலறம்’ எனும் தலைப்புடன் நூல்வடிவம் கொள்வது அகத்திற்கு மிகுந்த நிறைவளிக்கிறது. காந்தி 150வது ஆண்டினைக் கொண்டாடும் விதமாக பொதிகைத் தொலைகாட்சியில் எழுத்தாளர்சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் பதினாறு ஆளுமைகளுடன் நிகழ்த்திய நேர்காணலின் எழுத்தாக்கமே இந்நூல்.
காந்தியும் கார்ல் மார்க்சும் இந்நூற்றாண்டில் அதிகம் மீள்கண்டுபிடிப்பு செய்யப்படும் மனிதர்களாகத் திகழ்கிறார்கள். அவ்வகையில் இந்நூல் காந்தியின் பலபக்கப் பரிமாணங்களைத் தெளிவுற முன்வைக்கும் ஓர் நற்தொகுப்பு. அறத்தையறிவதும் அரசியலடைவதும் அவரவர் அகத்திலேற்கும் உறுதியேற்பில் உள்ளது. ஓன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்பக் கனவுகொண்டு செயலாற்றிய காந்தியையும், அவருடைய தாக்கங்களையும் வெவ்வேறு அரசியல் தரப்புக் கோணங்களில் பதிவுசெய்திருக்கிற புத்தகம் செயலறம்.
Be the first to rate this book.