அர்மீனிய எழுத்தாளர் ஹிரண்ட் மத்தேவெஸ்யானின் கதைகள், கூட்டுப்பண்ணைக் காலகட்டத்தையும் அதற்கு முன்னரான போர்க்கால அனுபவங்களைக் கடந்து வந்ததையும் நினைவு கூர்கிறது.
மனிதனுக்குப் பேருதவியாக உள்ள குதிரைகளைப் பற்றிய உளவியலை இந்நூல் பேசுகிறது. உளவியல் என்று சொல்வதைவிட கதை மாந்தர்களின் மனங்களுக்குள் சென்று அங்கிருந்துகொண்டு எதிராளியைப் பற்றிப் பேசுகிறார் ஹிரண்ட் மத்தேவெஸ்யான்.
பெரும் படைப்புகளாக அல்லாமல் சின்னச் சின்னக் கோடுகளின், மெல்லிய நகைச்சுவைகளின் வாயிலாக, நிலக்காட்சிகளின் நுணுக்கங்களை உறவுகளின் பிணைப்புகளாக மாற்றித் தரும் வகை தெரிந்தவர் ஆசிரியர். காட்டுப் பாதைகளின் குறுக்கே வந்து பாய்ந்து துரத்தும் ஓநாய்களின் கடிபடலுக்கும் இடையில் ஓடும் குதிரைகளின் அன்றாடங்களையும் அவற்றின் பின்னணியில் மனிதர்களின் காதல் கதைகளையும் அன்றாடங்களையும் பேசிய வகையில், ஹிரண்ட் மத்தேவெஸ்யான் ஒரு வித்தியாசமான கதை சொல்லிதான்.
சோவியத் யூனியனிலிருந்து மாபெரும் ரஷ்ய மொழிப் படைப்புகளை வெளியிட்ட மாஸ்கோவின் ராதுகா பதிப்பகம் அதாவது முன்னேற்றப் பதிப்பகம் இன்று இல்லை. தற்போது ‘அடையாளம்’ வெளியீடாக வந்துள்ள இந்நூலில் காப்புரிமைக் குறியீடு அருகே முன்னேற்றப் பதிப்பகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் போட்டிருப்பது, முந்தைய தலைமுறை வாசகர்களுக்குத் திரும்பிவராத அந்த வசந்த காலத்தின் நினைவுகளைச் சற்றே கிளறிவிடுகிறது.
-பால்நிலவன்
Be the first to rate this book.