காலந்தோறும் கதைகள் தீர்வதில்லை. வேறு வேறு மனிதர்களின் கதைகள் சொல்லப்பட்ட வண்ணமிருக்கின்றன. சில தருணங்களில் சான்றாதாரங்களுடன் அவை வரலாறாகப் பரிணமிக்கின்றன. அவ்வரலாற்றில் பெரும்பாலான தருணங்களில் பலதரப்பட்ட மனிதர்களின் குறிப்பிடப்பட வேண்டிய வாழ்க்கை கைவிடப்படுகிறது. இலக்கியம் அவர்களின் மீது பாய்ச்சும் சிறிய வெளிச்சம் ஆசுவாசமளிக்கிறது. அதிகாரத்தின் பிடியில் மறைக்கப்படும் எளிய மனிதர்களின் அன்றாடங்கள் புனைவாக்கப்படுவதோடு அல்லாமல் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றன. அதிலும் பின் நவினத்துவ இலக்கியங்கள் அதிகாரத்தால் எழுதப்படும் வரலாறுகளைப் பகடி செய்கின்றன.
பாலசுப்ரமணியம் பொன்ராஜின், சீமுர்க் சிறுகதைத் தொகுப்பு சமகாலத்திலிருந்து வரலாற்றைப் பரிசீலிக்கும் பார்வையைப் பிரதானப்படுத்தி புனைவுகளைக் கட்டமைக்கிறது. காலத்தின் ஊடே கதைகளாகச் சொல்லப்பட்ட வரலாறுகளும், அதன்வழி கூறப்பட்ட கதைகளும் கண்டுக்கொள்ளப்படாமல் வெறும் காட்சிப்பொருட்களாக அதன் சின்னங்கள் எஞ்சுவதை சிறுகதைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத காரணத்தால் அல்லது வரலாற்றை அறிந்துகொள்வதில் சமகாலம் காட்டும் அலட்சியத்தால் தனித்த அடையாளங்களாக சமகாலம் உருமாற மறுக்கின்றன. இன்றிருக்கும் பண்பாட்டு அம்சங்கள் வரலாற்றுச் சின்னங்களாக மாறுமா எனும் கேள்வி பதிலற்றுப் போகின்றது.
Be the first to rate this book.