1867 இல் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்துறையின் முன்னோடியாவார். அவர் "ஸ்ரீ தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' என்ற பாய்ஸ் கம்பெனி நாடக சபையைத் தொடங்கி நடத்தியவர். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட நடிகர்கள், உடுமலை நாராயண கவி, தஞ்சை இராமையா தாஸ் உள்ளிட்ட கவிஞர்கள் இந்த நாடக சபையில் பயிற்சி பெற்றவர்கள். 68 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். ஆனால் 16 நாடகப் பிரதிகளே கிடைத்துள்ளன.
இந்நூல் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களான வள்ளி திருமணம், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், ஞான சௌந்தரி ஆகியவற்றில் தென்னகச் செவ்விசை, தமிழ்த்திருமுறை, நாட்டுப்புற இசை, இந்துஸ்தானி இசை, கிருதி, கீர்த்தனை ஆகியவை இடம் பெற்றுள்ள விதத்தை ஆராய்கிறது.
தொல்காப்பியர் காட்டும் வண்ணங்கள் நாடகங்களில் இடம் பெற்றதையும், பல்வேறு சந்தங்கள் நாடக ஆக்கத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் இந்நூல் ஆராய்கிறது. தொல்காப்பியத்தில் கூறப்படும் சீர், அடி, வண்ணம், மெய்ப்பாடு, குறுக்கம், நீட்டம் ஆகியவை இயற்றமிழை விட, இசைத்தமிழுக்கே பெரிதும் பொருந்துவனவாக உள்ளன என்பதை நூல் எடுத்துக்காட்டுகிறது.
சங்கரதாஸ் சுவாமிகள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களை உருவாக்கியிருந்தாலும், எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சமுதாயத்திற்குத் தேவையான ஏராளமான கருத்துகள் அவற்றில் இருப்பதாக நூலாசிரியர் கூறியிருப்பது, குறிப்பிடத்தக்கது. தமிழ் நாடகங்களில் இசையின் தாக்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும்.
Be the first to rate this book.