‘சங்கப் பெண் கவிதைகள்’ - கட்டுரை நூல்தான். நாற்பத்தைந்து கட்டுரைகளையும் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொரு மாதிரியாக எழுதியிருக்கிறார். ‘அவளின் சஞ்சலமான மனதின் ஓசைதான் இரவின் பேரோசையாக எழும்புகிறது. தலைவனுக்காகக் காத்திருந்த பெண்ணே இரவின் ஓசையாக மாறுகிறாள்.’ ‘அவனுடைய பாதையை இவள் கற்பனையில் வரைந்துகொண்டிருக்கிறாள்.’ ‘ஒருவரின் நினைவு என்பது அவர் சொன்ன சொற்களாகவே இருக்கின்றன.’ பத்திக்குப் பத்தி இதுபோன்ற வாக்கியங்கள் வருவதால் கட்டுரைகளைப் படிக்கிற உணர்வு எழாமல், சிறுகதைகளைப் படிக்கிற உணர்வே மேலெழுகிறது.
ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் சங்கப் பெண் கவிகள் பற்றி கொடுக்கப்பட்டிருக்கிற தகவல்களுக்காகவே இந்நூல் கவனம்கொள்ளப்பட வேண்டும். கட்டுரைகளின் மூலமாக சங்கப் பெண் கவிதை களுக்கு நூலாசிரியர் விளக்கம் தரவில்லை. உரை எழுதவில்லை. சங்கப் பெண் கவிதையை மட்டுமல்ல, மற்ற கவிதைகளையும், பிற இலக்கியங்களையும் எப்படிப் படிக்க வேண்டும் என கற்றுத்தந்திருக்கிறார். கவிதையை, இலக்கியத்தை அணுகுவதற்கான கருவிகளைத் தந்திருக்கிறார். வலிமை உள்ளது எஞ்சும். சங்கப் பெண் கவிதைகள் - நூலுக்கு வலிமை இருக்கிறது.
- இமையம்
Be the first to rate this book.