மரணமும் தத்துவ விசாரணையும் இவரது கைப்பொருள்கள். இவற்றின் மூலம் இவர் மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, தடுமாற்றங்களை, வீழ்ச்சியை, பேதங்களை ஆய்வு செய்கிறார். இவரது மதிப்பீடுகள் நிதர்சனமான உண்மைகளாக இருப்பதால் யதார்த்த வாழ்வின் உணர்வுகளையும் உரசல்களையும் நம்மால் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மரணம் கொண்டுவரும் துயரத்தைவிட மரணச் சடங்குகளுக்கான செலவினங்கள் ஏற்படுத்தும் கவலை, பிரிவின் துயரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
தமிழில் மரணம் பற்றி எழுதப்பட்ட சிறந்த கதைகளைத் தொகுத்து ஒரு நூல் உருவாக்கினால் அதில் இவரது ‘கூடு விட்டு கூடு’ கதை நிச்சயம் இடம்பெறும். ஒரு தாயின் மரணம் என்பது இந்திய மரபில் எல்லா விதிகளையும் புறந்தள்ளி விடுகிறது.
இன்பத் துன்பங்களை ஒன்றெனக் கருதும் துறவிகளுக்கும் அன்னையின் மரணம் புறக்கணிக்க முடியாதது. உறவுகளைக் கடந்தவனுக்கும் தாயின் மரணத்தில் பங்கேற்க சாஸ்திரங்கள் அனுமதிக்காவிட்டாலும், தாயின் ஈமக்காரியங்களைச் செய்வது அவனுக்குக் கடமையாகும். இதுதான் ‘சம்ஸ்காரம்’ கதையாக உருவாகியுள்ளது. படைப்பின் கலையழகு காணாமல் போகாதபடி, வேத நுட்பங்களையும் வேத ஞானத்தையும் வாசகனுக்குக் கடத்தி விடும் கா.வி.ஸ்ரீயின் திறமையை இருகை கூப்பி வணங்கலாம்.
இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பரிமாணத்தில் படைக்கப்பட்டிருப்பது ஒரு அழகு! அக்கிரகாரத்து கதைமாந்தர்களையும் மொழியையும் இலகுவாக கையாள்கிற கா.வி.ஸ்ரீயால் விளிம்புநிலை மக்களின் மொழியையும் எவ்வித சிக்கலின்றிக் கையாளமுடிகிறது.
சுருக்கமாகச் சொன்னால் இவை இந்தக் காலத்துக் கதைகள் அல்ல; என்றோ பிறப்பிக்கப்பட்டவை; செல்போன் காலத்துத் தமிழ் படைப்புலகம் வேறு; ஏன் பல கதைகள் கார்டுலஸ் போன் இருந்த காலத்துக்கும் முந்தியவை. ஆனால் எக்காலத்துக்கும் பொருந்தும் கதைகள் அடங்கியுள்ள தொகுப்பு இதுவென கூறலாம். அதற்கும் ஒரே காரணம்; ‘வியனுலுக அனைத்தையும் அமுதென நுகரும்’ ஆற்றலும் ஆசையும் கொண்டவர் கா.வி.ஸ்ரீ.
- சந்தியா நடராஜன்
Be the first to rate this book.