பதினான்கு கட்டுரைகள் வடிவம் பெற்ற உரைகளின் தொகுப்பு. நாராயணகுரு பற்றிய முதல் கட்டுரையில் குருவை வாசகர்களுக்கு பொன்னீலன் அறிமுகப்படுத்தும் விதமே அலாதியானது,
சாதாரணமாகத் தோன்றும் உரையாடல் அவர் உன்னதத்தை உயர்த்திப் பிடிக்கிறது. அள்ள அள்ளக் குறையாத வள்ளுவத்திலிருந்து அள்ளியொரு கட்டுரையும். குன்றக்குடி அடிகளாரைப் பற்றியோர் அறிமுகக் கட்டுரையும் நூலில் இடம்பெற்றுள்ளன.
புவியில் வாழ்வோம் கட்டுரையில், மதத்தின் தோற்றத்தில் தொடங்கி, கிறிஸ்துவம் பரவியது.அதன் சிக்கல்களுடன் சட்டாம்பிள்ளை வேதம்,கால்சட்டை, தேவாலயங்கள் போன்றவை உருவானதன் பின்னணியையும் விளக்குகிறார்.
நிறுவனமாகும் மதத்தின் அதிகாரத்தை விளக்கி. கிறிஸ்துவ மாணவர்களை நோக்கி நூலாசிரியர் எழுப்பும் கேள்விகள் எல்லாருக்குமானவை.
வள்ளலார் பற்றிய கட்டுரை சுருக்கமானதோர் ஆய்வாகவும் அவருடைய பாடல்களைப் பற்றிய அறிமுகமாகவும் அமைந்துள்ளது. வள்ளலாரின் முக்கிய பாடல்களைச் சிறப்பாக விளக்குகிறார்.
விவேகானந்தரின் சமய நீதியும் சமத்துவ நீதியும். பாரதியின் சமயம் ஆகிய கட்டுரைகளும் அவரவர் நிலைகளைத் தெளிவுபடுத்துகின்றன.
நூலின் பெரிய கட்டுரையான என்ன செய்யப் போகிறாய்?, நாட்டில் இந்துத்துவத்தின் பண்பாட்டு ஊடுருவல் பற்றி ஆராய்கிறது. இந்துத்துவ பொருளாதாரத்தையோ, அரசியலையோ சொல்லி வளர முடியாத நிலையில் வைதீகப் பண்பாட்டைப் பொதுவான இந்தியப் பண்பாடாக எவ்வாறு பரப்பினரென விளக்குகிறார்.
பொதுவுடைமைக் கொள்கைப் பற்றாளரான ஒருவர், மதத்தையும் ஆன்மிகத்தையும் எவ்வாறு அணுகுகிறார். மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்ட துறவிகளை ஆன்மிகத் தலைவர்களை எப்படிப் பார்க்கிறார் என்பது மட்டுமல்லாமல். சமூகம் சார்ந்து சமயங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி இந்த நூல்.
Be the first to rate this book.