ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் அற்புத கலை சமையற்கலை என்றால் அது மிகையாகாது. சுவைக்க தெரிந்த நாவுக்குத் தேவை ருசி. ருசிக்க, ரசிக்க வைக்கும் சமையலில் எத்தனை வகைகள்! சுவையான சமையல் எப்படி இருக்க வேண்டும்? உடம்பை கெடுக்காததாக இருக்க வேண்டும். இதுதானே நமது விருப்பம். நவநாகரீக உலகில் உணவுப்பிரியர்கள் வகைவகையான உணவுகளைத் தரும் ஓட்டல்களை நோக்கி படையெடுக்கும் காலம் இது. ஓட்டல் உணவுகள் உடல் நலத்துக்கு நன்மை செய்யுமா? ஆனால், வகைவகையான சமையல்களை வீட்டில் எப்படி சமைத்து சாப்பிடுவது? அதுவும் ருசியாக... இதோ உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். சமையற் கலையில் கைதேர்ந்த ஞானமுடையவர் இந்த நூலாசிரியர் தர். இந்த நூலில் 158 சமையல் வகைகளை அடுக்கி இருக்கிறார். ‘சைவ உணவு தொடங்கி அசைவ உணவு வரை, வட இந்திய உணவு முதல் தென்னிந்திய உணவு வரை வகை வகையாக பரிமாறியிருக்கிறார்' என்றுதான் சொல்ல வேண்டும். பன்னீர் பசந்து, நவரத்தின குருமா, மொகலாய சிக்கன், சிக்கன் பர்கர், பச்சை சட்னி மசாலா என நாவுக்கு சுவை தரும் வகைகள். ஓட்டல் வகைகள் போன்றிருக்கிறதே... இவைகளை வீட்டில் எப்படி சமைப்பது..? இந்த ஐயம் வேண்டாமே உங்களுக்கு. சமையல் நிபுணர் ஸ்ரீதர் இந்த நூலில் சூத்திரம் ஒன்றை சமையல் ஆர்வலர்களுக்கு கற்றுத் தருகிறார். அது என்ன? ஒரே வகை மசாலாவைப் பயன்படுத்தி ஒன்பது சமையல்களைச் செய்யலாம் என்கிறார். அதுவும் அருஞ்சுவையுடன்... நாவில் எச்சில் ஊறுகிறதா? பக்கத்தைப் புரட்டுங்கள். மொத்த வித்தையையும் கற்றுக் கொள்ளுங்கள். இனி உங்கள் சமையல் அறை உங்களுக்கு மகுடத்தைச் சூட்டுவது நிச்சயம்.
Be the first to rate this book.