இரண்டு வகையான வாசகத்தைச் சிந்திப்பதிலிருந்து உரையாடுவோம். முதலாவது, சமாதியில் வழிபடுவோர் சமாதியை வழிபடுவதில்லை. அதில் அடங்கியிருப்பவரை வழிபடுகிறார்கள். இரண்டாவது, பள்ளிவாசலில் வழிபடுவோர் பள்ளிவாசலை வழிபடுவதில்லை. அந்த இடத்தில் அல்லாஹ்வை வழிபடுகிறார்கள். இந்த இரண்டின் கோணங்களும் வணக்க வழிபாட்டின் கருத்தை எளிதாகப் பிரித்துக்காட்டுகிறது. சமாதியை வழிபடுவோர் என்று இங்குக் குற்றம் சாட்டப்படும் மக்கள், 'நாங்கள் எங்கே சமாதியில் உள்ளவர்களை வழிபடுகிறோம்? அவர்களை என்ன அல்லாஹ் என்றா சொல்லுகிறோம்? அவர்களிடம் பரிந்துரைதானே கேட்கிறோம்? எங்களுக்கு வேண்டியதை அந்த இறைநேசர்கள் அல்லாஹ்விடம் பெற்றுத்தருவார்கள் என உதவிதானே கேட்கிறோம்?' என்பார்கள். சிக்கல் எங்கே எனில், தாங்கள் புனிதப்படுத்தும் இறந்தவர்களை உயிருள்ள மனிதர்களின் நிலையிலோ, அல்லது அதைவிட பிரத்தியேக சக்தி பெற்றவர்களின் தன்மையிலோ இவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதுதான். இதன் விளைவாக அவர்களிடம் பிரார்த்தனை செய்வதையோ, உதவி கோருவதையோ, அபயம் தேடுவதையோ, ஏன் அவர்களின் சமாதிகள் முன்பு சிரம் தாழ்த்திப் பணிவதையோ, அஞ்சுவதையோ வணக்க வழிபாடு என்றே புரியாமல் இணைவைக்கிறார்கள். ஆனால், இதே செயல்கள்தாம் அல்லாஹ்வுக்குச் செய்யும்போது, அது பள்ளிவாசலின் உள்ளேயோ வெளியேயோ நம்மிடமிருந்து வெளிப்படும்போது வணக்க வழிபாடாக மாறுகின்றது. இதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இறந்தவருக்குச் செய்யும் சமாதி வழிபாட்டில் அந்த வழிபாடு உயிரற்ற எலும்புக்கூடாகி பயனற்றுப் போகின்றது. ஷைத்தான் இதை மறைத்து அதையொரு பொற்கிழி முடிப்பு போல காட்டிவிடுகின்றான். இதில் நிறைய சந்தேகங்களைத் தூண்டிவிட்டு அவற்றின் மீதான நம்பிக்கைகளைப் புனிதப்படுத்துகிறான். ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஹுமைது இந்நூலில் இந்த வழிபாட்டைச் சுற்றி எழும் அய்யங்களுக்குத் தெளிவான பதில்களை ஆதாரங்களுடன் தொகுத்தளித்து ஏகத்துவ வழிபாட்டின் பொருளை நிலைநிறுத்துகிறார்.
Be the first to rate this book.