“கூண்டுப் பறவைகள் ஏன் பாடுகின்றன?” என்று கேட்டார் ஆப்ரோ அமெரிக்கக் கவிஞர் மாயா ஆஞ்சலோ. பறவைகளிடம் பாடுவதற்கு என்று இதுவரை பாடப்படாத ஒரு பாடல் இருக்கிறது. அதை அப்பறவை வானில் இருந்தாலும் கூண்டில் இருந்தாலும் பாடத் தவறுவதே இல்லை.
கவிஞர் பிரியா பாஸ்கரன்கூட இப்படிப்பட்ட ஓர் அபூர்வப் பறவையாகத்தான் எனக்குத் தென்படுகிறார். பழந்தமிழிலக்கியப் பயிற்சியுடன் வெண்பா போன்ற பாவினங்களின் மீது அக்கறை கொண்ட பிரியா பாஸ்கரன் போன்றவர்கள் தமிழ்க் கவிதையில் நவீன வெளிப்பாட்டை நோக்கி நகர்கையில் தமிழ் புதிய தோலுரிப்புக்கு ஆளாகிறது.
தமிழ்க் கவிதைப் பிரதேசத்தில் புதிய பூகோளம் ஒன்று உள்நுழைகிறது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கள் சார்ந்த தமிழின் திணைக் கோட்பாடு ஒரு புதிய உடைப்புக்கு ஆளாகிறது. ஓக் மர நிழலும், மேப்பிள் மர எழிலும், இருட்டில் பால்போல் ஒளிரும் வெள்ளிப் பனியுமாய் கண்ணில் விரியும் புதிய நிலக்காட்சிகள் பிரியா பாஸ்கரன் கவிதைகளைச் சர்வதேசத்தன்மை கொண்டவையாக்குகின்றன. பனியும் பனி சார்ந்த தமிழ் வாழ்க்கைக்குமான ஆறாம் திணை ஒன்று மொட்டவிழ்த்து மெல்ல மலரத் தொடங்குகிறது.
இந்திரன்
கலை இலக்கிய விமர்சகர்
Be the first to rate this book.