கமல தேவியின் கதைகளில் வெளிப்படும் மாந்தர்கள் ஒருவகையில் தாஸ்தாவெஸ்கி கதை மாந்தர்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். கூர்மையான சுயப் பிரக்ஞையே பிணியாகவும் வதைக்கும் தன்மை கொண்டவர்கள். திருமணம், பணி என பிடிவாதமாக சமூக அழுத்தங்களில் தங்களின் தேர்வுகளின் பக்கம் நிற்பவர்கள். மறுபுறம் அவர்கள் பார்த்து வளரும் பாட்டிகள், தாத்தாக்கள் மற்றும் வாசிப்பு பரிச்சயம் அற்ற தோழிகள் போல் உள் முரண்களற்ற வாழ்வு வாய்க்காதா என ஏங்குபவர்கள்.
அவ்வகையில் கமல தேவியின் பாத்திரங்கள் நவீனத்துவ இலக்கிய போக்கு உருவாக்கிய பாத்திரங்களின் நீட்சி. ஆனால் கமல தேவியின் பாத்திரங்கள் சுய வெறுப்பு அல்லது சமூக வெறுப்பை நோக்கி பயணிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதற்கு மிக முக்கியமான காரணம் அவர் கதை மாந்தர்களில் வெளிப்படும் தீவிர விலகல் மனப்பாங்கு எனச் சொல்லலாம்.
கமலதேவியின் மொழி செதுக்கப்பட்ட மொழி. குறிப்பாக உரையாடல்கள் அவருடைய மிகப்பெரிய பலம். இயல்பான உரையாடல்களில் கூட ஒருவித பூடகத் தன்மையை கொண்டு வர அவரால் முடிகிறது.
- எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்
Be the first to rate this book.