‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ - இந்தச் சொற்களை எங்கே கேட்டாலும் ஒரு முகம் உங்கள் மனக்கண் முன்வந்து நிற்கும். அவர்தான் சகாயம். ஊழல், முறைகேடு, விதி மீறல்கள் செய்பவர்களுக்கு எப்போதும் அவர் சுக்குக் கஷாயம் போல் கசக்கக் கூடியவர். அதிகார வர்க்கத்தின் எந்தப் பதவியில் இருந்தாலும் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகளில் சகாயமும் ஒருவர். அதிலும் குறிப்பிடத்தகுந்தவர்.
பல அதிகாரிகள் தன்னளவில் நேர்மையாளர்களாக இருந்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், சகாயம், அதைவிட முக்கியமாக தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நேர்மையானவர்களாக மாற்றும் பிரசாரத்தையும் தொடர்ந்து செய்துவருபவர். அப்படிப்பட்ட சகாயம், தனது பணிக் காலத்தில் சந்தித்த சவால்களின் தொகுப்பு முதன்முதலாக புத்தகமாக வருகிறது. ‘பொது ஊழியர் ஒருவர் தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப்பூர்வமான வேலைக்குச் சட்டப்படி பெற வேண்டிய ஊதியத்தைத் தவிரக் கைகூலி பெறுவதையே 'லஞ்சம்’ என்று வரையறை செய்கிறது அரசியலமைப்புச் சட்டம். லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி இல்லாமல் தினசரி செய்தித்தாள்கள் வருவது இல்லை. லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி ஓர் அலுவலகத்துக்கு ஒருவர் இருந்தாலே அது ஆச்சர்யமாகப் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட ஆச்சர்யம் தரும் மனிதர்களில் முதன்மையானவர் சகாயம்!
‘என் அரசுப் பணியில் எங்காவது ஓர் இடத்தில் ஒரு சிறு ஊழல் செய்து இருந்தாலோ, ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கி இருந்தாலோ, பொதுமக்கள் முன்னிலையில் என்னைத் தூக்கில் போடலாம்’ என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதும் தைரியம் எந்த அதிகாரிக்கு இருக்கிறது? அப்படியொரு நேர்மையாளருக்கு மகுடம் சூட்டுகிறது இந்த நூல். சகாயம் கடந்து வந்த முள் பாதைகளையும், அவர் பணியில் சந்தித்த அனுபவங்களையும் பத்திரிகையாளர் கே.ராஜாதிருவேங்கடம் அழகான நடையில் தந்திருக்கிறார். சாக்கடைச் சமூகத்தில் அதைச் சுத்தப்படுத்துவர் அனுபவிக்கும் கஷ்டத்துடனேயே சகாயம் போன்றவர்களின் பயணமும் இருக்கிறது. ஊழல் இல்லாத சமுதாயம் படைக்கவும் ஊழலை எதிர்த்துப் போராடவும் ஊக்க சக்தியாக இந்தப் புத்தகம் அமையும்!
Be the first to rate this book.