நூலகங்களுக்குச் சென்று நூல்களைப் புரட்டுகையில், கடற்கரை சென்று கடலில் கால்களை நனைக்கையில், அலுவலகங்கள் கடைகள் சென்று அவரவர் பணிகளை முடிக்கையில், என்றேனும் இந்தச் செயல்பாடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு சாத்தியமாகுமா என சிந்தித்து இருப்போமா? படிகளில் பாய்ந்தேறும் நாம் முதுமையில் மாற்றுத்திறனாளிகளாகக் கூடிய வாய்ப்பிருப்பது தெரிந்தும் ஏனிந்த பாராமுகம் என யோசிக்க வைக்கிறது இந்த நூல்.
சாய்வுப்பாதைகள், பார்வையற்றோர் படிக்கும் வசதிகொண்ட நூலகங்கள் என 1990களுக்குப்பின் உருவாக ஆரம்பித்த திருப்புமுனை எப்படி நிகழ்ந்தது? இந்த நெடும்பயணத்தின் நாயகர்கள் யாவர்? இப்பயணத்தைப் பொறுத்தவரை, பிளாட்டோ, அரிஸ்டாட்டில், தாகூர் போன்றோர்களை ஹிட்லரோடு இணைக்கும் சூழல் எது? என ஒரு பரபரப்பான திரைப்படம் போல (ரொமான்ஸ், கிளுகிளுப்பு சமாச்சாரங்கள், இடைவேளை உட்பட) ஓர் ஆய்வு நூல் என்பது வித்தியாசமான வாசிப்பனுபவம்.
நாயகனைப்பற்றி எதிர்பார்ப்புகளை அதிகரித்துக்கொண்டே சென்று இடைவேளைக்குப் பிறகு நாயகனை அறிமுகப்படுத்தும் பிளாக்பஸ்டர் வகை யுக்தியில் நூல் அமைந்துள்ளது. காதலுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவிதான் இன்று உலகையே ஆள்கிறது, லட்சக்கணக்கான உயிர்ப்பலி வாங்கிய உலகப்போர்தான் அளப்பரிய நன்மையை மனிதகுலத்துக்கு ஆற்றியுள்ளது, உலகை சுரண்டிய / சுரண்டும் நாடுகளாக அறியப்பட்ட நாடுகளான இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மூலம்தான் உலக நாடுகளின் மனிதாபிமானம் விழித்தது என்பதுபோன்ற சுவையான செய்திகள் பாயசத்தில் மிதக்கும் முந்திரிகளாக நூல் முழுதும் சுவையூட்டுகின்றன.
பண்டித எழுத்து, முகநூல் எழுத்து என இரு துருவங்களுக்கிடையே அபுனைவு நூல்கள் மத்தியில் கிரியேட்டிவ் நான் ஃபிக்ஷன் ஆக இந்த நூல் தனித்துவமாய் மிளிர்கிறது.
Be the first to rate this book.