வாசகனுக்குப் புரியவேண்டும் என்ற கவலையை அடிநாதமாகக் கொண்டவர் வித்யா சுப்ரமணியம். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற பம்மாத்து இவரிடம் இல்லை. தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கதை எழுதுவதற்காக வாழ்க்கையை விற்றுவிடவில்லை. மிக உயரமான ஸ்டூலோ, உபதேசமோ இல்லை. அதனால்தான் இதிகாசங்களோடு நெருக்கமாக இருக்க இவரால் முடிகிறது. அந்த இதிகாசங்கள் மிக முக்கியமானவை என்று இவரால் எண்ண முடிகிறது.
நல்ல மனிதர்களைப்பற்றியும் மனிதநேயம் பற்றியும் மானுடத்தின் இனிய பக்கங்கள் குறித்தும் தொடர்ந்து படித்தால் நம்மையும் அறியாமல், நாம் இன்னும் மேம்பட்டவர்களாக, கூடுதல் கருணையுடன், அதிக அன்புடன் இருக்கவும், நம்மிடம் இருக்கும் சிலவற்றைத் தொலைக்கவும் முயல வேண்டும் என்கிற எண்ணம் ஆழ்மனத்தில் விழுந்துவிடும். உயர்ந்தவற்றைச் சொல்வதற்குத்தான் இலக்கியம். உயர்ந்தவனையும் இன்னும் உயர்த்த வல்லவையே உண்மையான கதைகள். இதைத்தான் வித்யா சுப்ரமணியம் செய்ய முயன்றிருக்கிறார். அதில் அவர் பெறுகிற வெற்றியின் விஸ்தீரணம் நம்முடைய கைகளில். மனித மனங்களில் அமுங்கி எழுந்த அடையாளம், தத்துவக் கீற்றுகளாகத் தெறித்து விழுந்திருக்கின்றன.
Be the first to rate this book.