இந்நூல் இனக்குழுகால ஆரியர் வட இந்தியா வந்தது முதல் சாதி தோன்றியது வரையிலுமான சமூக வரலாற்று நிகழ்வுகள் குறித்தும், தமிழ்ச் சமூகமாக இருந்த கேரளச் சமூகத்தில் சாதி செயற்கையாக உருவாக்கப்பட்டது குறித்தும், சங்ககாலத்தில் சாதி இருக்கவில்லை என்பது குறித்தும் விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்துள்ளது.
கி.மு. 8ஆம் நூற்றாண்டுவரை வட இந்தியாவில் தொழில்பிரிவுகளோ, வகுப்போ, வர்க்கங்களோ இருக்கவில்லை. அங்கு கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரை வைதீக பிராமணியமோ, சாதியமோ உருவாகவில்லை. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வைதீக பிராமணியம், சாதியம் போன்றவற்றிற்கான கருத்தியல்கள் தோன்றுகின்றன. கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் வட இந்தியாவில் சாதியம் தோன்றுகிறது. குப்தர்காலத்தில் கி.பி. 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில்தான் சாதியம் குப்த அரசின் சட்ட அங்கீகாரத்தைப்பெற்று சமூகம் முழுவதும் நிலைநிறுத்தப்படுகிறது. மனுசுமிருதி காலத்தில் இருந்த 61 சாதிகள் குப்தர் காலத்தில் 100 சாதிகளாகப் பெருகின. குப்தர் காலத்திற்குப் பின்னர்தான் சாதியம் திட்டமிட்டு இந்தியா முழுவதும் பரப்பப்படுகிறது.
சிலர் சாதி இயற்கையாக உருவாகியது எனக் கருதுகின்றனர். அது உண்மையல்ல. ஒரு சமூகக் குழுவின் மேல்நிலையைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சாதியம். சாதி செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதற்குக் கேரளச் சமூகம் ஒரு சான்றாக இருக்கிறது. சாதிகளின் அகமணமுறை என்ற இரத்த உறவு முறை இனக்குழுக்களிடம் இருப்பதால் சிலர் இனக்குழுக்களிடமிருந்துதான் சாதி வந்ததாகக் கருதுகின்றனர். ஆனால் இனக்குழுக்களிடமிருந்தும் சாதி தோன்றவில்லை.
பழந்தமிழ்ச் சமூகத்தில் இருந்த உடன்போக்கும், பொருள்வயிற்பிரிவும் அன்று சாதிகள் இருக்கவில்லை என்பதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. சங்ககாலத் தலைவி, தன் குடிக்குரிய தலைவனோடு மட்டும் உடன்போக்கு மேற்கொள்ளவில்லை. அவள் ஐவகைத்திணைத் தலைவனோடும், அனைத்துக் குடித்தலைவனோடும் உடன்போக்கு மேற்கொண்டாள் என்பதைச் சங்க இலக்கிய அகப்பாடல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன. ஆகவே சங்ககாலத்தில் அகமணமுறையோ சாதியோ இருக்கவில்லை.
Be the first to rate this book.